Ad Widget

23 சதவீதமான மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 23 சதவீதமான மாணவர்கள், காலை உணவை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்’ என்று யாழ்ப்பாணம் பாடசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

‘வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் – 3’ நூல் வெளியீட்டு நிகழ்வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனார்.

‘யாழ்ப்பாணத்தில், மாணவர்கள் மத்தியில் பற்சூத்தை நோய் காணப்படுகின்றது. பெற்றோர்கள், பிள்கைகளுக்கு வழங்குகின்ற உணவு வகை காரணமாகவே இவ்வாறான பல் சம்பந்தப்பட்ட நோய்கள் காணப்படுகின்றன. பெற்றோர், பிள்ளைகளுக்கு பணிஸ், பான் போன்ற பேக்கரி உணவு வகைகளையே வழங்க விரும்புகின்றார்கள் அல்லது பிட்டை மாத்திரம் உணவாக வழங்கி வருகின்றனர். தோசை, அப்பம், இடியப்பம் என்பவற்றைக் பிள்ளைகளுக்கு கொடுக்க பெற்றோர்கள் விரும்பவில்லை’ என்று அவர் இதன்போது கூறினார்.

‘தொலைக்காட்சியில் வரும் சின்னத்திரைகளில், தாய்மார் மூழ்கியிருப்பதே இதற்கான காரணமாகும். இதனால், தங்களுடைய பிள்ளைகளுக்கு உணவுகளைத் தயார் செய்துக்கொடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. தாய்மார்களுக்கு, வீட்டில் அவித்துக்கொடுக்கின்றன பிட்டு இலகுவாக அமைகின்றது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இதனாலேயே 23 சதவீதமான மாணவர்கள் உணவு உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எனினும் சில குடும்பங்களில் நிலவும் வறுமையான சூழ்நிலையும் இதற்கு காரணமாக அமைகின்றது. 77 வீதமான மாணவர்கள், நூடில்ஸ்ஸை சாப்பிட்டு விட்டே பாடசாலைக்கு வருகின்றனர். பிள்ளைகளின் ஆரோக்கியமான உணவு தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்தவேண்டும்’ என்றும் அவர் இதன்போது கோரினார்.

Related Posts