Ad Widget

2100க்குள் பல நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம்!

கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படுமாம். அமெரிக்கா முழுவதும் மொத்தமாக கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் அடியோடு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படுமாம்.

ஊர்களையும், நகரங்களையும், வீடுகளையும் கடல் கபளீகரம் செய்யும் காரணத்தால் பல லட்சம் பேர் இடம் பெயர்ந்து செல்லக் கூடிய நிலையும் ஏற்படுமாம். மேலும் பல கோடி அளவுக்கு பொருட் சேதமும் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமாம்.

கரோலினா, புளோரிடா ஆகியவையும் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படுமாம். இதில் புளோரிடாவுக்குத்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். இங்கு கணக்கிடவே முடியாத அளவுக்கு சேதம் இருக்கும் என்கிறார்கள்.

எந்த அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் என்பதை விட அதனால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்த்து கரை சேருவது எப்படி என்பதுதான் விஞ்ஞானிகளின் பெரும் கவலையாக உள்ளது. மேலும் முன்பு கணித்ததை விட கடல் நீர் மட்ட உயர்வு அதிகமாகவே இருக்கிறதாம். இதற்குக் காரணம், பூமியில் கரியமில வாயுவின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதே.

இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஜெரார்ட் கூறுகையில், இது அமெரிக்காவுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. உலகம் முழுமைக்குமான பிரச்சினை. சர்வதேச பிரச்சினை. உலகம் முழுவதும் பல கோடி வீடுகள் கடலில் மூழ்கப் போகின்றன. பல கோடிப் பேர் பாதிக்கப்படவுள்ளனர். மிகப் பெரிய குழப்பத்தையும் பூமி சந்திக்கப் போகிறது.

எந்த வேகத்தில் கடல் நீர் மட்டும் உயரும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்றாலும் கூட அது வேகமாக இருக்கிறது என்பதே உண்மை. நிச்சயம் இதைத் தவிர்க்கவும் முடியாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுவதே புத்திசாலித்தனம் என்றார் அவர்.

விஞ்ஞானிகளின் கணிப்புப் படி கடல் நீர் மட்டும் 6 அடி அளவுக்கு உயரும் என்று வைத்துக் கொண்டால் அமெரிக்காவில் 2 சதவீத பகுதி கடலில் மூழ்கிப் போய் விடும். பல லட்சம் கோடி அளவுக்கு பெரும் சேதத்தை சந்திக்கும் அமெரிக்கா.

விஞ்ஞானிகள் சொல்வதைப் பார்த்தால் 2100ல் அமெரிக்கா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பூமியும் மிகப் பெரிய ஸ்தம்பிப்பை சந்திக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக நம்பலாம்.

Related Posts