தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய 2026ஆம் ஆண்டிற்கான பிரதான தேருநர் இடாப்பு மற்றும் 2026 (1) ஆம் இலக்க குறைநிரப்பு தேருநர் இடாப்பின் பிரகாரம், இலங்கையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,534,397ஆக பதிவாகியுள்ளது.
அரசியலமைப்பின் 98ஆம் உறுப்புரையின் (8)ஆம் உப உறுப்புரையின் கட்டளைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து மொத்தமாக 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 1,818,347 வாக்காளர்களைக் கொண்டு 19 உறுப்பினர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,927,929 வாக்காளர்களைக் கொண்டு 19 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேலும், களுத்துறையில் 1,048,593 வாக்காளர்களுடன் 11 உறுப்பினர்களும், கண்டியில் 1,214,014 வாக்காளர்களுடன் 12 உறுப்பினர்களும், மாத்தளையில் 438,895 வாக்காளர்களுடன் 5 உறுப்பினர்களும், நுவரெலியாவில் 616,116 வாக்காளர்களுடன் 8 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர்.
தென் மாகாணத்தைப் பொறுத்தவரை, காலியில் 920,707 வாக்காளர்களுடன் 9 உறுப்பினர்களும், மாத்தறையில் 697,787 வாக்காளர்களுடன் 7 உறுப்பினர்களும், அம்பாந்தோட்டையில் 532,377 வாக்காளர்களுடன் 7 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 607,489 வாக்காளர்களுடன் 6 உறுப்பினர்களும், வன்னி மாவட்டத்தில் 317,148 வாக்காளர்களுடன் 6 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 464,128 வாக்காளர்களுடன் 5 உறுப்பினர்களும், திகாமடுல்லையில் 571,911 வாக்காளர்களுடன் 7 உறுப்பினர்களும், திருகோணமலையில் 325,998 வாக்காளர்களுடன் 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 1,443,921 வாக்காளர்களைக் கொண்டு 15 உறுப்பினர்களும், புத்தளம் மாவட்டத்தில் 679,551 வாக்காளர்களுடன் 8 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் 757,578 வாக்காளர்களுடன் 9 உறுப்பினர்களும், பொலநறுவையில் 357,334 வாக்காளர்களுடன் 5 உறுப்பினர்களும் இடம்பெறுகின்றனர்.
ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 718,633 வாக்காளர்களுடன் 8 உறுப்பினர்களும், மொணராகலையில் 410,038 வாக்காளர்களுடன் 6 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.
இறுதியாக, சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 944,506 வாக்காளர்களுடன் 11 உறுப்பினர்களும், கேகாலை மாவட்டத்தில் 721,397 வாக்காளர்களுடன் 9 உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவற்றுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.