Ad Widget

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்சவினால் இன்று நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் மீதான விவாதங்கள் தொடர்ச்சியாக 23 தினங்கள் நடைபெறவுள்ள நிலையில், வரவுசெலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், வரவுசெலவுத்திட்டம் தொடர்பான நிதி அமைச்சரின் உரை பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு, அதனை தொடர்ந்தும் விவாதங்கள் ஆரம்பமாகவுள்ளன.

2022ஆம் ஆண்டுக்கான செலவீனங்கள் உட்பட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பின் பின்னர் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சுமார் 7 தினங்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை சுமார் 16 தினங்களுக்கு விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் 373 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சிற்கும், 185.9 பில்லியன் ரூபாய் நிதி அமைச்சிற்கும், 127.6 பில்லியன் ரூபாய் கல்வி அமைச்சிற்கும், 153.5 பில்லியன் ரூபாய் சுகாதார அமைச்சிற்கும், 243.9 பில்லியன் ரூபாய் விவசாய அமைச்சிற்கும், ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசேட தேவையுடையவர்களை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்ட நிகழ்வுகளை சைகை மொழியில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தின் அனைத்து நிகழ்வுகளும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வரவு செலவு திட்டத்திற்கான நிகழ்வுகளின் போது பொது மக்களுக்கன பகுதி மூடப்பட்டிருக்கும் என்பதோடு, வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்படும் வரவுசெலவுத்திட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமாகும்.

Related Posts