2013 இல் நடைமுறைப்படுத்தும் பாடசாலை தவணை அட்டவணை; கல்வி அமைச்சால் வெளியீடு

அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதலாம் தவணை ஜனவரி 2 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 5 ஆம் திகதி வரைக்கும், 2 ஆம் தவணை ஏப்ரல் 22 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 2 ஆம் திகதி வரைக்கும், 3 ஆம் தவணை செப்ரெம்பர் 2 ஆம்திகதி தொடக்கம் டிசெம்பர் 6 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணைக்காக ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 9 ஆம் திகதி வரைக்கும், 2 ஆம் தவணை ஏப்ரல் 17 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 5 ஆம் திகதி வரைக்கும், 3 ஆம் தவணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வருடத்தில் 210 நாள்கள் சகல பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டி இருப்பினும் அரச விடுமுறை தினங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் 200 நாள்கள் நடத்த வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசு வெளியிடும் விசேட விடுமுறை நாள்கள், சனி, ஞாயிறு நாள்கள், தவணை விடுமுறை நாள்கள் போன்ற காலங்களில் சகல பாடசாலைகளும் மூடப்படும். இருந்தும் விசேட காரணங்களுக்காக பாடசாலை மூடப்படுமாயின் அது தொடர்பாக குறைவடையும் நாள்களுக்காக பதில் பாடசாலை நடத்தப்படுதல் வேண்டும்.

2013 ஆம் ஆண்டுக்குரிய விசேட உலக மற்றும் சர்வதேச தினங்களையும் பாடசாலையுடன் தொடர்புடைய விசேட தினங்களையும் சகல பாடசாலைகளும் தங்களுக்கு ஏற்ற முறையில் கொண்டாட நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.