Ad Widget

2009 மே 19இல் உயிருடனேயே இருந்தார் பிரபாகரன்!- பொன்சேகா

இறுதிக்கட்டப் போர் முழுமையாக முடிவடைவதற்கு முன்னரே போர் முடிவடைந்துவிட்டது என்ற அறிவிப்பை மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்தார் என்றும், 2009 மே 19ஆம் திகதிகூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை என்றும் இறுதிக்கட்டப் போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டார்.

அத்துடன், இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றும், வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி வெள்ளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கன்னி உரை நிகழ்த்தினார். இதன்போது இறுதிக்கட்டப் போர் நடந்த முக்கிய பல விடயங்களை அவர் அம்பலப்படுத்தினார்.

நிதிச் சட்டங்களின் கீழான கட்டளைகளை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணைகளின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் கூறியவை வருமாறு:-

“இராணுவத்துக்கு அச்சுறுத்தலான காலப்பகுதியொன்று இருந்தது. அப்போது இராணுவத்தைவிட்டு தப்பிச்சென்று அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. இவ்வாறு வாழ்ந்துவிட்டு போர் வெற்றி கௌரவத்தைப் பறித்துக்கொள்வதற்காக அலைந்து திரியவும் இல்லை.

நான் ஓய்வுபெற இருந்த இராணுவ அதிகாரியாக இருந்த போதிலும் எனக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இது முழுமையான பொய்யாகும்.

இராணுவத் தளபதியானதும் மிகவும் சாதாரணமாக எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் நிமித்தம் சூழ்ச்சி செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை. எனினும், அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அவர்களது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் எமது ஜாதகங்ளை களவாடிச் சென்று ஜோதிடம் பார்ப்பார்கள். அந்த ஜாதகம் சிறப்பானதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் குரோதங்ளை ஏற்படுத்திக்கொள்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழ்ச்சி செய்கின்றார்கள் என்றும், அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்றும் நினைத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பழிவாங்கச் செயற்படுவார்கள்.

எனக்கு எதிர்பார்ப்பு ஒன்றுதான் இருந்தது. பொதுவாக எந்தவொரு இராணுவத் தளபதியிடமும் அந்த அப்பாவியான எதிர்பார்ப்பு இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இராணுவத் தளபதியொருவருக்கு இந்த நாட்டின் சார்பான தூதுவராக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. சில இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவ்வாறான எதிர்பார்ப்புத்தான் எனக்கும் இருந்தது. அதற்கு அப்பால் செல்ல எமக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்கவில்லை.

2005ஆம் ஆண்டு நான் இராணுவத்தைப் பொறுப்பேற்கும் போது இராணுவத்தின் செலவீனங்களுக்காக வருடமொன்றுக்கு 82 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. நான் 3 வருடங்களும் 7 மாதங்களும் இராணுவத் தளபதியாகச் செயற்பட்டிருந்தேன். ஒரு இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை நான் 2 இலட்சமாக அதிகரித்தேன். அப்போதும் எனக்கு 82 மில்லியன் ரூபாதான் கிடைத்தது. எனினும், இராணுவத்தைப் பராமரிப்பதற்காக நான் மேலதிகமாக பணம் கேட்டிருக்கவில்லை.

அதற்கு முன்னரும் நான் போருக்கு கட்டளையிட்ட சந்தர்ப்பத்திலும் போருக்கான ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகள் இந்த 82 பில்லியன் ரூபாவுக்கு வெளியிலேயே நடைபெற்றன. அது சீனாவில் இருந்த நடைபெற்றிருந்தது. நான் போர் செய்தபோது வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான கட்டணங்கள் 2012ஆம் ஆண்டிலேயே செலுத்த ஆரம்பிக்கப்பட்டன. அவை 2020 வரை செலுத்தப்படும்.

இவ்வாறான நிலையில், மேற்படி காலப்பகுதியில் நாட்டில் போர் நடைபெறுவதாகவும் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் நாட்டின் ஆட்சியாளரும் பாதுகாப்புப் பிரதானிகளும் நாட்டு மக்களுக்கு கூறியிருந்தனர். அது முற்றிலும் பொய்யான விடயமாகும். போருக்கு இவ்வளவு பணம் செலவாகியிருக்கவில்லை.

போருக்கான செலவுகள் 2012ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு போரைக் காட்டி மக்களை ஏமாற்றி போருக்கென கூறி அந்தப் பணத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்திருந்தனர்.

உதாரணமாக 130 மில்லிமீற்றர் தோட்டாக்களைக் குறிப்பிட முடியும். அவற்றை நாம் கப்பல் கணக்கிலேயே கொண்டு வருவோம். போர் ஆரம்பிக்கும்போது அந்தத் தோட்டாவொன்றின் விலை 250 டொலராகக் காணப்பட்டது. 15 வருடங்களில் அதன் விலை 50 டொலரினால் மட்டுமே அதிகரித்திருந்தது.

போர் நடைபெற்ற காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் அந்தத் தோட்டவொன்றுக்கு 650 டொலர் கணக்கில் செலுத்த ஆரம்பித்திருந்தார். இது 400 டொலர் அதிகமாகும். இவ்வாறு செலவிட்டு இறுதியில் எனக்கு தோட்டா வாங்குவதற்கு நிதி இல்லாமல் போய்விட்டது. தோட்டாக்கள் இல்லாம் என்னால் நான்கு மாதங்கள் போர் செய்ய முடியாமல் போய்விட்டது. 2008ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எம்மிடம் போதிய தோட்டாக்கள் இல்லாமையினால் நாளொன்றுக்கு ஒரு மல்டி பரல் தாக்குதலைத்தான் மேற்கொண்டிருந்தோம்.

அதன் பின்னர் நாம் பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் தனிப்பட்ட ரீதியில் பேசி 60 மில்லியன் டொலர் பெறுமதியான தோட்டாக்களைத் தருவித்தோம்.

பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் ஒன்றும் செய்யாமல் மேலே பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பஸில் ராஜபக்ஷவுடனும் பேசி 60 மில்லியன் டொலரைப் பெற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் எனக்கிருந்த நட்பைப் பயன்படுத்தித்தான் தோட்டாக்களை வரவழைத்து போதிய ஆயுதங்கள் இல்லாத ஆறு மாதகால போரை நாம் நடத்தியிருந்தோம்.

அந்தவகையில் தற்போது போர் வெற்றிக்கான கௌரவத்தை உரிமை கோருபவர்களுக்கு இந்த விடயங்கள் எல்லாம் மறந்துபோய்விட்டன.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் வாக்களிப்பைத் தடுப்பதற்காக மஹிந்த ராஜபக்‌ஷவினால் பிரபாகரனுக்கு 2 மில்லியன் டொலர் கப்பம் வழங்கப்பட்டது. இது இலங்கை நாணய மதிப்பில் 200 மில்லியன் ரூபாவை விடவும் அதிகமாகும். இதை என்னால் அச்சமின்றிக் கூறமுடியும். ஏனெனில், ஜனாதிபதி அலுவலகத்தில் பஸில் ராஜபக்ஷவுக்கு இருந்த அலுவலகத்தில் நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இது பற்றி என்னிடம் கூறியிருக்கின்றார்.

தெற்காசியாவிலுள்ள அயல் நாடொன்றிலிருந்து மில்லியன் டொலர் பணம் தங்களுக்குக் கிடைத்ததாகவும், தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை தடுப்பதற்கு தனக்கு என்ன செய்வீர்கள் என்று பிரபாகரன் கேட்டிருந்ததாகவும், அதற்கு கடற்புலிகளுக்குத் தேவையான படகுகளை மலேசியாவிலிருந்து வாங்குவதற்கு 2 மில்லியன் டொலர்களைத் தருவதாகக் கூறியிருந்ததாகவும், அதன் பிரகாரம் அந்தப் பொதியை பஸில் ராஜபக்ஷவே மலேசியா சென்று வழங்கிருந்தார் என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது, அச் சந்தர்ப்பத்தில் மலைநாட்டு அரசியல்வாதி ஒருவரும் அந்த இடத்தில் இருந்தாகவும், பிரபாகரன் அவரைப் பார்த்து நீங்களும் மலைநாட்டு மக்கள் வாக்களிக்க இடமளிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் பஸில் ராஜபக்ஷ என்னிடம் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்க செயற்பட்டிருந்தால் அது மரணதண்டனைக்குரிய குற்றமாகும். அந்தவகையில் இவ்வாறான செயற்பாடுகளிலேயே அப்போதிருந்த பிரபல அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தனர். அது பற்றி தேடிப்பார்ப்பதற்கு காலங்கள் கடந்துவிடவில்லை.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் மிகவும் மோசடிமிக்கதாகும். வாக்கெண்ணும் ஆறு நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தேர்தல் பெறுபேறுகள் திருத்தி எழுதப்பட்டு வெளியிடுமாறு கூறப்பட்டது. இதனால் அப்போதிருந்து தேர்தல் ஆணையாளருக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. அவர் எங்கு சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, 2005ஆம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தேர்தல்கள் நீதியான முறையில் நடைபெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இரு தேர்தல்களிலும் தோல்வி கண்டிருப்பார்.

இறுதியில் 2015ஆம் ஆண்டிலும் பதவி அவாவில் அவர் போட்டியிட்டார். எனினும், அதில் மோசடிகளை மேற்கொள்ள முடியாமல்போய்விட்டது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இருந்தபடியால் வாக்கெண்ணும் நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்த முடியாமல் போனது. அவ்வாறு இல்லாதிருந்தால் மோசடிமிக்க தேர்தலொன்று நடைபெற்று 2010 ஆம் ஆண்டில் என்னை கைதுசெய்ததுபோன்று மைத்திரிபால உள்ளிட்ட பலரையும் கைதுசெய்திருப்பார்கள். அதன் நிமிர்த்தம் இராணுவத்தினரைக் கொண்டு பல்வேறு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

போர் வெற்றியின் கௌரவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அழைந்து திரிவதுடன், போர் வெற்றி குறித்து புத்தகங்களையும் எழுதினர். நான் இரண்டு வருடங்களும், ஏழு மாதங்களும் போரை வழிநடத்தியிருந்தேன். போர் நிறைவடைய இரண்டு மாதங்கள் இருக்கையில் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீண்டகாலமாக 24 மணிநேரம் போர் செய்து நீங்கள் களைப்படைந்து இருப்பீர்கள் என்பதால் அடுத்த நிலையிலுள்ள இராணுவ அதிகாரிக்கு எஞ்சியிருக்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறு கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் உண்மையில் போரை கொண்டுநடத்துவதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. எனினும், என்னை அகற்றிவிட்டு போரைக்கொண்டு நடத்தியது தான்தான் என்ற கௌரவத்தை சம்பாதித்துக்கொள்வதற்காக இதை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்துக்கொண்டேன்.

இவ்வாறு போர் வெற்றிக்கான கௌரவத்தைப் பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாக அலைந்து திரிந்தனர். புத்தகங்களை எழுதினர். புத்தகம் எழுதியபோதும், போர் முடிந்த திகதியைக்கூட சரியாக அறிந்துவைத்திருக்கவில்லை.

2009 மே 18 ஆம் திகதி என்னை அலரிமாளிகைக்கு அழைத்து பதவி உயர்வை வழங்கினர். அப்போதும் போர் முழுமையாக முடிவடையவில்லை. 2009 மே 16 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்துவந்து நிலத்தை முத்தமிட்டார் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. அப்போதும் போர் முடிவடையவில்லை. மே 19ஆம் திகதி போர் முடிந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தனர். அப்போதும்கூட போர் முடிவடைந்திருக்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்தார். எனினும், நாடாளுமன்ற நிகழ்வு முடிவடைந்து நான் காரில் சென்றுகொண்டிருந்தபோது பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. போர் வெற்றிக்கான கௌரவத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கும் இவர்கள் போர் முடிவடைந்த திகதியைக்கூட அறிந்துவைத்திருக்கவில்லை.

போரின் கடைசி வாரத்தில் நான் முக்கியமான கடமையின் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவேண்டியிருந்தது. நாம் தருவிக்கவிருந்த இராணுவத் தளபாடங்கள் பற்றி இறுதித் தீர்மானங்களை கொடுக்க வேண்டியிருந்தது. இது ஐந்து தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட பயணமாகும். எனினும், ஏப்ரல் 19 தொடக்கும் மே 19 வரையான காலப்பகுதியினுள் பயங்கரவாதிகள் களப்பு பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதை வைத்துக்கொண்டுதான் கடைசி வாரத்தில் இராணுவத்தளபதி நாட்டில் இருக்கவில்லை என்றும், தாங்கள் போரை வழிநடத்தினர் என்றும் கூச்சலிடுகின்றனர். கடைசி ஒருவார காலப்பகுதியினுள் இவர்கள் செய்த கீழ்த்தரமான நடவடிக்கைகளினால்தான் வெள்ளைக்கொடி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

அவ்வளவு காலமும் மிகவும் தூய்மையாக மேற்கொள்ளப்பட்டுவந்த போர் நடவடிக்கைகள் இவர்களது ஒருவார கால நடத்தைகளினால் கேவலமாகிவிட்டது. இறுதிக் காலத்தில் நற்பெயரை களங்கம் ஏற்படுத்திவிட்டனர். எனவே, போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பில் கூடியவிரைவில் நாம் மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவது இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். எனினும், போரை வழிநடத்தியவன் என்ற வகையில் கட்டாயம் வெளிப்படையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த விசாரணை வெளிப்படையாக நடத்தப்படுவதற்கும், அதை எமக்குப் பலமாக்கிக்கொள்வதற்கும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

போரை வழிநடத்தியன் என்ற வகையில் ஜெனிவா சாசனங்களையும், மனித உரிமைகளையும் மதித்தே போர் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அவற்றை யாரும் ஒரு சிலர் மீறியிருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கப்படவேண்டும். இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் பேசப்பட்டது. அது தொடர்பில் எனக்கும்கூட மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விடயம் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது பற்றி உண்மை. மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.

அதேவேளை, பொன்சேகா உரையாற்றும்போது மஹிந்தவையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கடுமையாக சாடி பேசியிருந்தார். சபைக்குள் வந்து பதிலளிக்குமாறும் அவர் மஹிந்தவுக்குச் சவால் விடுத்திருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ எம்.பி. நேற்றைய தினம் பொன்சேகா உரையாற்றுவதற்கு முன்னர் சபைக்குள் வந்திருந்தார். பொன்சேகா உரையாற்றிவிருந்த நிலையில் அவர் திடீரென சபைக்குள் இருந்து சென்றுவிட்டார்.

இந்நிலையிலேயே, மஹிந்தவுக்கு பொன்சேகா இந்தச் சவாலை விடுத்தார். பொன்சேகா சுமார் ஒரு மணித்தியாலயம் உரையாற்றினார். அவரின் உரையின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆளுங்கட்சி எம்.பிக்கள் மேசைகளில் கைதட்டி வரவேற்றனர். மஹிந்த அணியினர் மௌமாக இருந்தனர்.

Related Posts