Ad Widget

2009க்கு பின் குடியேறியோருக்கே இந்திய அரசின் வீட்டுத்திட்டம்; செயலகக் கூட்டத்தில் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம் அடுத்த கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இவர்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் 10 இற்கு மேல் பெற்ற வறுமையானவர்களுக்கே வீட்டுத் திட்டப் பணம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் 5 ஆயிரம் வீடுகள் வரையில் அமைக்கப்படவுள்ளன. இந்த வீட்டுத் திட்டத்துக்குரிய முதல் கட்ட நிதி பயனாளிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட வேண்டும்.

இந்திய வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்காக புள்ளியிடல் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதில் 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொள்கின்ற சகலருக்கும் வீடு வழங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அடுத்த கட்ட வீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புள்ளியிடல் முறைமையில் 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட வறுமையான, வன்னியிலிருந்து மீளத்திரும்பியவர்கள், உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்ந்தவர்கள் ஆகியோருக்கே தற்போது இந்திய வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் சகல பிரதேச செயலர்கள், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts