Ad Widget

தமிழ் அகதிகளை இலங்கையிடமே ஒப்படைக்கும் ஆஸி.. ஐ.நா. கண்டனம்

unபுகலிடம் நாடி, உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருந்த 200 இலங்கைத் தமிழர்களை தடுத்து மீண்டும் இலங்கையிடமே ஆஸ்திரேலியா ஒப்படைக்கவிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் கவலை தரும் விஷயம் என்றும் அது வர்ணித்துள்ளது.

சமீபத்தில் புகலிடம் தேடி 2 படகுகளில் 200 தமிழர்கள் இலங்கையிலிருந்து உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா வந்தபோது அவர்களை வழிமறித்த ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனேகமாக இன்று அவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களை நடுக்க கடலில் வைத்து இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு உலகத் தமிழரக்ள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதேபோல ஐ.நாவும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளது.

இலங்கைப் படையினரிடம் சிக்கி பாலியல் பலாத்காரம், அடி உதை, சித்திரவதை என்று கஷ்டப்பட்டு வந்த தமிழர்கள்தான் அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக இப்படி ஆஸ்திரேலியா வருகின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் இலங்கைப் படையினரிடமே ஒப்படைப்பது என்பது அநியாயமானது என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் செயல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகையில், இதுவரை எந்த ஒரு உறுதியான செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அது மிகவும் கவலைக்குரியதாகும். சர்வதேச சட்டங்களின்படி எந்த ஒரு புகலிடம் தேடி வருபவரையும் கட்டாயப்படுத்தி அவர்களது நாட்டுக்கே அனுப்ப முடியாது, அனுப்பவும் கூடாது. இதை ஆஸ்திரேலியா உணர வேண்டும் என்றனர்.

கடந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 220 படகுகள் மூலம் 16,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஆஸ்திரேலியா போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts