20 ஆவது திருத்தச் சட்டம் குறித்து விளக்குகின்றார் தவராசா

மாகாண சபைகளின் அதிகாரத்தில் அரசாங்கம் தலையிடவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக, சில விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு மாற்றத்துடன் 20ஆவது திருத்தத்தினை அரசாங்கம் கொண்டு வந்திருந்தால், விஷேடமாக அமைந்திருக்கும்.

மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்தினையும் ஒரே தினத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடாகவே இந்த 20ஆவது திருத்த ஏற்பாடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்பாட்டில் கூறப்பட்டவைகளை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

தற்போது நடைமுறையில் உள்ள மாகாண சபைகளின் கடைசிக் காலம் எதுவோ அதற்கு முதல் ஒரு திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

அதன் பின்னர் கலைக்கப்படும் மாகாண சபைகளுக்கான கால முடிவில் தேர்தல் நடத்தப்படும். ஆளுநர் மாகாண சபையினைக் கலைக்கும் இடத்து இந்த மாகாண சபையின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தின் கீழ் வரும்.

ஆனால், அதில் சில உள்ளடக்கங்களில் முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் மாகாண சபையை கலைக்க முடியும். யாராவது ஒருவர் மாகாண சபையினை கலைத்து விட்டு, எமது அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டு வருவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

மேலும், முதலமைச்சர் ஆளுநரிடம் சென்று மாகாண சபையினை கலைக்க முடியுமென கூறினால், அந்த இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றம் இல்லாமல், இன்றுள்ள ஏனைய ஏற்பாடுகள் மூலம் ஆளுநர் ஊடாக ஜனாதிபதி நிர்வாகப்படுத்துவதாயின் சிறப்பாக இருக்கும்.

ஒரு மாகாண சபை எப்போது ஏற்படுத்தப்படுகின்றதோ அதில் இருந்து 5 வருட காலத்திற்கு செயற்பாட்டில் இருக்க வேண்டும். இது ஒன்று மட்டுமே 13 ஆம் திருத்த சட்டத்தினை தளப்பாது வைக்கும் ஒரு சட்டம்.

20ஆவது திருத்தச் சட்டம் எந்தவகையிலும் மாகாண சபையின் அதிகாரங்களில் தலையிடவில்லை. ஆளுநர் மற்றும் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பவை பிழையான கருத்துக்கள்.

மக்கள் கருத்தறியும் குழுவில் மக்களினால் தெரிவிக்கப்பட்ட விடயம் சகல தேர்தல்களும் குறிப்பிட்ட தினத்தில் நடாத்த வேண்டுமென்பதே.

அரசியலமைப்பு மாற்றத்துடன் அரசாங்கம் இவற்றினைக் கொண்டு வருமாக இருந்தால், செழுமைப்படுத்தப்பட்ட விடயமாக இருக்கும். எனவும் தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts