புதிய தேர்தல் முறையானது எழுத்து வடிவில் கிடைக்கப்பெறும் வரையில் அதில் உள்ளடக்கம் குறித்து தெளிவடைந்துவிடமுடியாது. புதிய தேர்தல் முறைமை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டாலும் அதனை அமுல்படுத்துவதென்பது எளிதான காரியமல்ல.
எனவே அடுத்து இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல் புதிய முறையில் அல்லது தற்போது அமுலில் உள்ள விகிதாசார முறையின் ஊடாகவே இடம்பெறும் சாத்தியம் தென்படுபவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது, புதிய தேர்தல் முறையானது எமக்கு எழுத்து வடிவில் கிடைக்கப் பெறவில்லை. எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே அதனை படித்து தெ ளிந்து உறுதியான கருத்துக்களை வெ ளியிட முடியும். 20ஆவது திருத்தம் தொடர்பிலும், அதில் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலும், இன்னும் கூறபோனால் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இது எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்றாலே அதிலிருந்து எதனையும் தெ ளிவடைய முடியும்.
வடக்கு – கிழக்கை பொறுத்தவரையில் அதில் இடம்பெற்றுள்ள இடம்பெயர்வு காரணமாக வாக்காளர்களின் எண்ணிக்கை வெகுவா குறைந்துள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதன் நிமித்தம் விசேடமாக யாழ். தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடையலாம்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறுவதற்கு விரும்புகின்ற போதிலும், அவர்களுடைய காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இதனால் மக்கள் மீள்குடியேறமுடியாத நிலை இருந்து வருகின்றது. வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில் அங்கிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பேணப்பட வேண்டும். அப்படியில்லாது புதிய தேர்தல் முறையினூடாக எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு முடிவெடுக்கப்படுமானால் அது நியாயமானதாக இருக்காது.
இது இவ்வாறிருக்க வடக்கு – கிழக்கிற்கு வெ ளியே உள்ள நிலைமைகளைப் பொறுத்தவரையில், குறிப்பாக முஸ்லிம்களும் மலையக தமிழ் மக்களும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறான மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யக்கூடிய வகையில் புதிய முறைமையில் அமையவேண்டும். அதற்கான ஒழுங்குகள் இதில் உள்வாங்கப்படுதலும் அவசியமானது.
புதிய தேர்தல் முறையினூடாக தேர்தலை நடத்துவதற்கு முன்பாக தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. தேர்தல் மாவட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் தொகுதிகள் நிர்ணயிக்கப்படவேண்டும். அதற்கு முன்பாக இவற்றை மேற்கொள்வதற்கு தேர்தல் நிர்ணய சபை ஒன்று நிறுவப்படுதல் பிரதானமானது. நிறுவப்படுகின்ற தேர்தல் நிர்ணய சபையானது கட்சிகளுடனும், சமுகங்களுடனும் கலந்துரையாடல்களையும், பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு தீர்மானம் ஒன்றிற்கு வரவேண்டி உள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற ரீதியில கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. அவ்வாறு புதிய தேர்தல் முறையானது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு அது நிறைவேற்றப்பட்டுவிட்டாலும் கூட அவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற 20 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவது அவ்வளவு எளிதான விடயமாக இருக்காது. புதிய தேர்தல் முறைமையை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால் தற்போது அமுலில் இருக்கின்ற பழைய முறைமையின் பிரகாரமே அடுத்த தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.