20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை : அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அறுவடைக்குப் பின்னரான இழப்பு வீதத்தினை குறைப்பதற்கு கனேடிய அரசாங்கத்தின் அனுபவத்தினையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று(16.10.2020) வருகை தந்த கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன் உடனான கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் கடற்றொழிலாளர்களினால் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளில் சுமார் 35 வீதத்திற்கு மேற்பட்டவை விற்பனைக்கு தரமற்றவை என்ற அடிப்படையில் வீசப்படுகின்றன.

ஆனால், கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் குறித்த இழப்பு வீதம் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறது.

இந்நிலையிலேயே கனேடிய உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கனேடிய உயர் ஸ்தானிகர், அதுதொடர்பாக சாதகமாக பரசீலிப்பதாக தெரிவித்ததுடன் இலங்கையின் சமுத்திர பல்கலைக் கழகத்துடன் இணைந்து கனேடிய கடல்சார் கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளினால் இலங்கை மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

மேலும், இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கனேடிய உயர் ஸ்தானிருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியலமைப்பில் குறித்த திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் என்பதை தான் நம்புவதாகவும் தெரிவிததார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்

வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்மையையும் கனேடிய உயர் ஸ்தானிகருக்கு சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor