Ad Widget

2 வருடங்கள் உறவுகளுக்காக காத்திருப்பு – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கவேண்டிய கடமை ஐக்கியநாடுகள் சபைக்கு உள்ளதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தமது உறவுகளை தேடியலையும் தமது அன்னையர், சகோதர, சகோதரிகளுக்காய் சர்வதேசம் குரல்கொடுக்க வேண்டும் என்பதோடு, இனவாத அரசிற்கு கால அவகாசம் துளியேனும் வாழங்ககூடாதென்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி, உடனடியாக தமக்கான தீர்வினை வழங்கவேண்டுமெனவும் காணாமலாக்கப்பட்டோருக்கான உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்தின்போதும், யுத்தத்திற்கு பின்னரும் பலர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயகப்பகுதிகளெங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts