Ad Widget

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : சுமந்திரன்

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

“நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளிலான மக்கள் சந்திப்பும் கருத்தாடல் நிகழ்வும் நேற்று (31) யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நடேசு சிவசக்திக்கு வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக விடுதி ஒன்று வழங்கப்பட்டது. அதையே தனது கட்சி அலுவலகமாக சில நாட்கள் முன்பு வரைக்கும் பாவித்துக்கொண்டிருந்தவர். தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய பின்னரே இப்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் வரவுசெலவு திட்டத்திற்கு வாக்களித்தார். தற்போது, மக்களின் அபிவிருத்திக்கு கருத்துக்களைக் கேட்பதை தவறென்று சொல்கின்றார்.

கடந்த அரசின் காலத்தில் இங்குள்ள ஒரு அமைச்சரின் கருத்துக்களின் படி அபிவிருத்தி நடந்தது. எமக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு துளி கூட இல்லை இங்கு செலவிட்ட பணத்தின் அளவு. அவர் தான் அந்த அபிவிருத்திகளைச் செய்தார். இப்போது வடக்கிலும் கிழக்கிலும் சரி தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், பிரதானமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிபையே தெரிவுசெய்துள்ளனர்.

2 கோடியை லஞ்சம் எனச் சொல்கின்றார்கள். ஊடகங்கள் வேண்டுமென்றே இது அரசியல் லஞ்சம் தானே, என ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார்கள்.

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த விடயம் எல்லை மீறிப் போயுள்ளது. ஆகவே சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts