காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலைக்கு அருகில் தீ!! நடவடிக்கை எடுக்காத பிரதேச சபை!!

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் திடீர் தீ பரவல் ஏற்பட்ட நிலையில் , தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர், பெற்றோலியத்தினர் ஆகியோரின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எரிபொருள் களஞ்சிய சாலை வளாகத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் அந்த காணிகளுக்குள் குப்பைகளும் கொட்டப்படுகிறது.

இது தொடர்பில் பெற்றோலிய அதிகாரிகளால் வலி.வடக்கு பிரதேச சபைக்கு பல்வேறு தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட போதும் பிரதேச சபைக்கு அறிவித்த போதிலும் பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

அதேவேளை குறித்த பகுதிகளில் தீ மூட்ட வேண்டாம் என்ற எச்சரிக்கை பதாகைகளை காட்சிப்படுத்துமாறு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவித்த போதும் அது தொடர்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்புமாறு கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த எரிபொருள் களஞ்சிய சாலை அப்பகுதியில் நிறுவப்படும் போது அதனை சூழவுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படும் எனவும் தீ விபத்துக்கள் ஏற்படாதவாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி வழங்கப்பட்டு இருந்தது
இந்நிலையில் எரிபொருள் களஞ்சிய சாலையை சுற்றி கம்பி வேலிகள் மாத்திரமே காணப்படுவதுடன் இன்றைய தினம் தீ பரவல் ஏற்பட்ட வெற்றுக்காணிக்கு அருகில் தான் எரிபொருள் தாங்கிகள் காணப்படுவதாகும் தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே குறித்த எரிபொருள் களஞ்சிய சாலையை சூழ பாரிய மதில்களை கட்டி அதனை பாதுகாப்பான களஞ்சிய சாலையாக மாற்றுமாறு அயலவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அயலவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவனாந்தரசாவின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில் தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts