Ad Widget

19ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் அமுல்

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், இன்று ஏப்ரல் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எனினும் இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய மூன்று சரத்துக்கள், அடுத்து வரும் புதிய நாடாளுமன்றிலிருந்தே அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடன் தொடர்புடைய சரத்துக்கள் மாத்திரமே இவ்வாறு புதிய நாடாளுமன்றில் அமுலுக்கு வரும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்களின் வெற்றியாக்கியது தாமே என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அவர், ‘பொதுமக்களுக்கு பல நன்மைகளை வழங்கும் வகையில் அரசியல் அமைப்பு சீர்திருத்தில் மாறங்களை கொண்டுவந்துள்ளதாகவும் அதனை புதிய அரசாங்கம் செய்யவில்லை. தாமே செய்தோம் எனவும் இது தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரட்டைக் குடியுரிமையைப் பெற்ற இலங்கையர்கள், தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்து 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஒருவரின் பதவிகாலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி ஒருவருக்கு கிடைத்திருந்த இராஜதந்திர சிறப்புரிமைகளும் நீக்கப்பட்டுள்ளன என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்த பிரதியமைச்சர், 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக இரத்து செய்யப்பட்ட 17ஆவது திருத்தமான சுயாதீன ஆணைக்குழு 19ஆவது திருத்தத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா, ‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைவிட்டிருந்தால் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது’ எனக் குறிப்பிட்டார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறிய அவர், 20ஆவது திருத்தம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி கோரிய போதும் பிரதமர் ரணில் அதில் அக்கறை செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஆனால், 19ஆவது திருத்தம் நிறைவேறியதால் வீட்டில் சென்று உறங்கப் போவதில்லை என்றும் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மேற்படி திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது இன்னும் பூரணமாகவில்லை என தெவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரிதொரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்பே அது பூரணமடையும் எனக் குறிப்பிட்டார்.

19ஆவது திருத்தச் சட்டம் குறித்த விவாதம் இனி வேண்டாம் என்றும் அதனை செயற்படுத்திப் பார்க்க வேண்டும் என்றும் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Related Posts