Ad Widget

162 பேருடன் மாயமான விமானம்; வான்வழித் தேடல்கள் இடைநிறுத்தம்

இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் பறந்த வழியில் காணாமல்போயுள்ள ஏர் ஏஷியா நிறுவனத்தின் பயணிகள் விமானத்தை வான் வழியாக தேடும் பணிகளை, இரவு சூழ்ந்துவிட்டதால் இந்தோனேஷியா இடைநிறுத்தியுள்ளது.

air_asia_plane

போர்னியோவுக்கு தென்மேற்காகவுள்ள கடற்பரப்பில் விமானம் தொடர்பை இழந்திருந்த இடத்தில், இந்தோனேஷியாவிலிருந்தும் சிங்கப்பூரிலிருந்தும் கிளம்பிய இராணுவ விமானங்கள் தேடிவந்தன.

மோசமான வானிலை நீடித்தாலும் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் சில கப்பல்கள் இந்த விமானத்தை தொடர்ந்தும் தேடிவருகின்றன.

ஏர்பஸ் 320 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் இந்தோனேஷியர்கள் பெரும்பான்மையாக மொத்தம் 162 பேர் இருந்தனர்.

கடுமையான காற்றை தவிர்ப்பதற்காக பாதை மாறுவதாக காணாமல்போன விமானத்தின் விமானி கூறியிருந்தாரே தவிர அபாய எச்சரிக்கை எதுவும் அவரிடம் இருந்து வந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த விமானத்திலிருந்து தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டால் அனுப்பப்படும் சமிக்ஞைகள் எதுவும் வரவில்லை என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் கூறினர்.
இந்த விமானத்தில் பெரும்பாலும் விடுமுறைக்காகப் பயணித்தவர்களே அதிகம் இருந்ததாகவும், சிங்கப்பூர் இந்தோனேசியர்களுக்கு பிடித்த விடுமுறைத் தலம் என்பதால் அங்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் ஜகார்த்தாவிலுள்ள செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.

இந்தோனேசிய நகரான சுரபயாவிலிருந்து புறப்பட்ட 45 நிமிடத்துக்குள் இந்த விமானம் விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்திருக்கிறது.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் தகவலறிவதற்காக குழுமியிருக்கின்றனர்.

குறைந்த விலை டிக்கெட்டுகளை வழங்கும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் என்றறியப்படும் விமான நிறுவனங்களில் ஒன்று இந்த ஏர் ஏசியா நிறுவனம். மலேசிய நிறுவனமான இந்த ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்தோனேஷிய துணை நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே காணாமல்போயுள்ளது.

இந்த நிறுவனத்தின் விமானங்கள் இதுவரை பாதுகாப்பாகவே இயங்கி வந்திருக்கின்றன.

மலேஷியாவுடன் தொடர்புடைய விமானம் காணாமல்போகும் சம்பவம் இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts