Ad Widget

1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு

Give-Blood-Give-Lifeசர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 1500 குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வு எதிர்வரும் 4ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு பொறுப்பாகவுள்ள குருதி மாற்று வைத்திய நிபுணர் கே.சி.டி.செனிவரத்தின தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிரதேசத்திற்கு உட்பட்ட குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களுக்கிடையிலான கூட்டம் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற்றது.

அங்கு கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிய நாடுகளிலேயே முதன்முதலாக உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இம்முறை இலங்கையைத் தெரிவு செய்துள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு கொடையாளர்களினை கௌரவிக்கும் வகையில் ஊர்தி வழியான கையெழுத்து வேட்டையும் இடம்பெறவுள்ளது. இவ்வூர்தி எதிர்வரும் 4ஆம் திகதி பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டு தெல்லிப்பளை ஊடாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தினை வந்தடையும். இதன் பின் குருதிக் கொடையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஊர்தி வவுனியாவிற்குச் சென்று அநுராதபுரம் வழியாக கொழும்பைச் சென்றடையும். இவ்வாறு நாட்டின் மற்றைய பாகங்களில் இருந்தும் கையெழுத்து வேட்டை இடம்பெறும்.

இந் நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts