15 வருடங்களுக்கு பின்னர் ஊடகத்துறை அமைச்சர் யாழிற்கு விஜயம்

யாழ்.மாவட்டத்திற்கு 15 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் 26ம் திகதி விஜயம் மேற்கொள்ளும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்தும் வகையில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போது, ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு,

26ம், 27ம், 28ம் திகதிகளில் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஊடகத்துறை அமைச்சருடன் குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த100 வரையான ஊடகவியலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

26ம் திகதி யாழ் வரும் ஊடகத்துறை அமைச்சர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கான 3 வீட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர் 40 வரையான குடாநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிவைப்பார்.

தொடர்ந்து தெற்கு போன்று வடக்கிலும் ஊடக சுதந்திரத்தை வலுப்படுத்த ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் பேச்சு நடத்துவதுடன், முப்படை தளபதிகள், பொலிஸ் பிரதானிகளுடனும் பேச்சு நடத்துவார்.

இந்த பேச்சுவார்த்தை முதலில் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சர், முப்படை தளபதிகள் பொலிஸ் பிரதானிகளுக்கு இடையிலும் பின்னர் அமைச்சர் மற்றும் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் பிரதானிகளுக்கிடையிலும் நடைபெறும்.

மேலும் அமைச்சரின் விஜயத்தின் நினைவாக நினைவு தூபி ஒன்றையும் நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயம் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு குழு, யாழ். ஊடக மையம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மற்றும் ஊடகத்துறை அமைச்சு ஆகியவற்றின் இணைப்பில் இடம்பெறவுள்ளது.

Related Posts