Ad Widget

140 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழில் இரத்ததானம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ். பிரதம தபாலகத்தில் இரத்ததான நிகழ்வு இன்று நடைபெற்றது.

140 ஆவது உலக அஞ்சல் தினம் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி யாழ். பிரதம தபாலகத்தில் வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என். இரத்தினசிங்கம் தலைமையில் இன்று காலை இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அஞ்சல் அலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என 25க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என். இரத்தினசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக அஞ்சல் தின நிகழ்வுகள் வடமாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்கமைய சரஸ்வதி மண்டபத்தில் இந்த நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அஞ்சல் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு கொழும்பு தபால் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு இன்று வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில் இன்று நாம் பாதுகாப்பு படைத்தலைமையகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவை சந்திக்கவுள்ளோம்.

மேலும், அஞ்சல் தினத்தை கொண்டாடும் முகமாக நாம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதில் முக்கியமாக யாழ். மாவட்ட மக்களுடைய இரத்த தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் இரத்ததான நிகழ்வினையும் இன்று ஏற்பாடு செய்துள்ளோம்.

அதன்படி அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த இரத்ததான நிகழ்வினை நாம் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் தினத்தை முன்னிட்டு செய்து வருகின்றோம் எதிர்வரும் 9 ஆம் திகதி அஞ்சல் தின நிகழ்வுக்கு என யாழ்.மாவட்டத்திற்கு தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க வரவுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts