வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை ஆட்சிக்கு வந்து ஒருவருட நிறைவினை முன்னிட்டு வார இதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்து 1 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.இந்த ஒரு வருட காலத்தில் இதுவரை வடக்கு மாகாணசபை சாதித்தது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு,
கூட்டமைப்பு வடமாகாண சபை ஆட்சிக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றீர்கள். உண்மையில் நான் ஆட்சிக்கு வந்ததைப் போல நினைக்கவில்லை. வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.ஏனெனில் நாங்கள் ஏனைய மாகாணங்களை விட போரினால் 25 வருடங்கள் நாங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே அதனை ஒருவருடத்துக்குள் சீர் செய்துவிட முடியாது. அதற்கு காலம் தேவை. எனவே எடுத்த எடுப்பில் வடமாகாணசபை இந்த ஒருவருடத்தில் என்ன செய்தது என்று கேள்வி கேட்பது அர்த்தமற்றது.
இதுவரை 17 அமர்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் போது 140 தீர்மானங்களும் 2 நியதிச் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.இவற்றையே தற்போது வடமாகாண சபையின் செயற்பாடுகள் எனக் கூற முடியும்.
இலங்கையில் இடம்பெற்றபோரினால் வடக்கில் 80ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் தமது கணவனை இழந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் அல்லது திட்டங்களை வடக்கு மாகாணசபை முன்னெடுத்துள்ளது.
அவர்களுக்கு உதவி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்கள் இதுவரை வடமாகாணசபையில் இல்லை. ஆனால்சிறியளவிலேனும் உதவி வருகிறோம்.
அதுமட்டுமின்றி அரசார்பற்ற நிறுவனங்களும் அவர்களுக்கான உதவிகளை செய்து வருகிறது. வடமாகாண சபையினால் சிலவிடயங்களை முற்று முழுதாக நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.