Ad Widget

14 வருடங்களுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு ஆரம்பம்! – இரு ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது.

இந்த வழக்குடன் நேரடியாக தொடர்புடைய பிரதான இரண்டு சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மூன் றாம் மற்றும் நான்காம் சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இவர்களையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதுடன் முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜராக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நீதிமன்றில் ஆஜரா கியிருந்தார். இவரது சார்பில் பிரபல சட்டத்தரணியும், யாழ். மாவட்ட எம்.பி.யு மான எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் ஆஜரானார்.

2001 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தலுக்காக ஊர்காவற்றுறைப் பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கூட்டமைப்பின் தலைவர்களான மாவை சேனாதிராசா, எம்.கே. சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் மற்றும் தொண்டர்கள் சென்றவேளை ஊர்காவற்றுறை புளியங்குளம் (தம்பாட்டி) என்னும் இடத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

இத்தாக்குதல் காரணமாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் ஏரம்பு பேரம்பலம், ரெலோ ஆதரவாளர் யோகசிங்கம் கமல்ஸ்ரோன் ஆகிய இருவரும் உயிர் இழந்ததுடன் மாவை சேனாதிராசாவுக்கு தலையிலும் கையிலும் மற்றும் சிவாஜிலிங்கத்துக்கு காலில் வெட்டுக்காயமும் ஏற்பட்டிருந்தது. ரவிராஜும் படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இதேபோன்று ஏனைய தொண்டர்களும் படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இத்தாக்குதல் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ். ரமேஸ், மதன் என்று அழைக்கப்படும் மதனராசா, ஜீவகன் என்று அழைக்கப்படும் அன்ரன் ஜீவராஜ், நமசிவாயம் கருணாகரமூர்த்தி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் நால்வரும் ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்களாவர்.

இவர்கள் நான்கு பேருக்கும் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டதன் காரணமாக 1 ஆம் எதிரியான நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ். ரமேஸ், 2 ஆம் எதிரியான மதனராசா (மதன்) ஆகியோர் நாட்டை விட்டு சென்றிருந்தனர். மற்றைய இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கிய நிலையிலேயே மேற்படி 3 ஆம் 4 ஆம் எதிரிகளுக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அக்காலப் பகுதியில் யாழ். நீதிமன்றில் விசாரிப்பது தவிர்க்கப்பட்டு சட்டமா அதிபரினால் திருகோணமலை நீதிமன்றுக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு மேற்படி வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4 சாட்சிகளுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதும் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஆஜராகாத நிலையில் வழக்கு நவம்பர் 17, 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts