Ad Widget

14 இராணுவத்தினரின் வழக்கு : நீதவான் அதிருப்தி

1998ஆம் ஆண்டு அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸாரால் மேற்கொண்டு வரும் வழக்கு விசாரணை, போதிய சாட்சிகள் இல்லாமையினால் இழுத்தடிப்பு செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.

மேலும், போதிய சாட்சிகள் இன்றி தடுத்து வைக்கப்படுவதும் அல்லது விடுதலை செய்வதும் அநீதியான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்புடைய விசாரணை, நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது அச்சுவேலி பொலிஸார் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கடந்த வழக்கு தவணையின் போது, (ஜனவரி 02) மேற்படி வழக்கினை இனிமேல் நடத்துவதிலிருந்து பின்னடிப்பு செய்திருந்த பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய, வழக்கை வாபஸ் வாங்கவுள்ளதாக கூறியிருந்தனர்.

நேற்றையதினம், மேலதிக அறிக்கையுடன் இணைந்திருந்த பொலிஸார், தொடர்ந்தும் வழக்கினை கொண்டு நடத்துவதற்குரிய ஆலோசணை கிடைக்கபெற்றமைக்கு அமைய, வழக்கை தொடர்ந்து நடத்தவுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து 14 இராணுவத்தினரின் விளக்கமறியலை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடித்து, நீதவான் உத்தரவிட்டார்.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி சரஸ்வதி சௌந்தரராஜன், முத்துப்பிள்ளை ஜெயசீலன் ஆகிய இரு சிவிலியன்களை, அச்செழு பகுதியில் நிலை கொண்டிருந்த 511 படையணியில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய்கள் சந்தேகத்தில் கைது செய்திருந்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பில், எந்தவொரு தகவலையும், இராணுவத்தினர் வெளியிட்டிருக்கவில்லை. பின்னர், குறித்த இருவரும் காணாமல் போயிருந்ததாக, இராணுவ பொலிஸாரால், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பில், அன்றைய காலப்பகுதியில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிரகா, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குடன் தொடர்புபட்டிருந்த சரத் கொடிகே, பிரசன்ன உதயகுமார பீரிஸ், மற்றும் பொரமே கெதிரே நிஹால் கருணாதிலக ஆகியோர், யுத்தத்தின் போது உயிரிந்திருந்தனர். இந்நிலையில் மேற்படி வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தவணை முறையில் இடம்பெற்று வருகின்றது.

மேலும், 14 இராணுவத்தினர் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி, யாழ். மேல் நீதிமன்றில் திங்கட்கிழமை (16) தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை விண்ணப்பம், பிறிதொரு தினத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது.

Related Posts