134 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்

voters-list-now-uploadedஇலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய பிரச்சினைகளை விசாரிக்க, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் பிரேரணை மீதான விவாதம் இன்று புதன்கிழமையும், நேற்று செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர் பிரேரணை இன்று மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளான அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. மக்கள் விடுதலை முன்னணி வெளிநடப்பு செய்ததது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் எதிராக வாக்களித்தனர். 33 உறுப்பினர்கள் அவைக்கு நேற்று சமூகமளித்திருக்கவில்லை.

இதன்பிரகாரம் பிரேரணைக்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் ஐ.நா.குழுவை நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

Related Posts