Ad Widget

13 யை நீக்குவதென்பது அரசின் நாடகம்: சிறிதரன் எம்.பி

Sritharan‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதென்பது அரசாங்கத்தின் நாடகமாகும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

‘இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பானது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லாது என்பது கட்சியின் இறுக்கமான முடிவாகும். இந்த முடிவை கூட்டமைப்பு எப்போதும் மாற்றிக்கொள்ளாது’ எனவும் அவர் உறுதியளித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கினால், சாதகமான பதில் வரும் என்று அதனை நீக்கப்போவதா அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்கள் நாடகம் ஆடுகின்றார்கள். அரசு சார்ந்த சில அமைச்சர்கள் மாகாணசபை முறைமையினை நீக்கினால் அதில் வரும் இலாபத்தினை அடைய முடியாதென்று 13ஆவது திருத்தத்தினை வைத்து சர்ச்சை கிளப்புகின்றார்கள்.

ஆனால், ஆட்சி முறைமையினைக் கொண்டு சட்டத்தினை சிங்கள மக்கள்தான் கொண்டு வருவார்கள், ஆனால் சட்டத்தினாலோ, சிங்கள மக்களினாலே 13ஆவது திருத்தத்தினை நீக்க முடியாது’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘இவ்வாறு நாடகம் போட்டால் 13ஆவது திருத்தத்தில் ஏதோ நல்ல விடயம் இருக்கின்றது என தமிழர்கள் நினைத்து கோஷமிடுவார்கள் என்று அரசு எண்ணுகின்றது. அதனால் தான் அரசு சார்ந்த அமைச்சர்கள் இவ்வாறு நாடகம் ஆடுகின்றார்கள்.

13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு காலத்தில் 13ஆவது திருத்தத்தினை வைத்து வடக்கு கிழக்கினை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்திய அரசு ஒருபோதும் இந்த 13ஆவது திருத்தம் தமிழரின் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்பதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இலங்கையில் ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களும் திட்டமிடப்பட்டு, ஒருங்கமைக்கப்பட்டு அவற்றினது முழு அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்தி தமிழர்களை ஒடுக்குவதிலேயே செயற்பட்டு வருகின்றன.

இந்தக் கொடூரமான அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து எப்போதும் தமிழ் இனமாக, தமிழ்த் தேசமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் அபிலாஷை. அதற்காகத்தான் கடந்த 60 வருடங்களாக நாங்கள் பல்வேறு வழிகளிலும் போராடி வருகின்றோம்.

எங்களது தேசிய இருப்புக்கான உயிரினும் மேலான இந்த ஆவலை 13ஆவது திருத்தமோ அதன் கீழ் வரும் மாகாணசபைத் தேர்தலோ, அதில் வெற்றி பெற்று நாம் அமைக்கக்கூடிய மாகாணசபையோ ஒருபோதும் சொற்ப அளவில்தானும் பூர்த்திசெய்யப் போவதில்லை.

அதனால் 13ஆவது திருத்தத்தை தமிழரின் பிரச்சனைக்கு தீர்வாக நான் ஒருபோதும் கருதவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தமிழருக்கு சாதகமான ஒருசில சரத்துக்கள் கூட 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை. அது மட்டுமல்லாது தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி எடுத்ததுமில்லை, உறுதிப்படுத்தவுமில்லை இந்தியா தனது பிராந்திய நலனுக்காகவே இதனை மேற்கொண்டது என்றார்.

இப்படியான 13ஆவது திருத்தம் எப்படி தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்? இதன் வழி உருவாகும் மாகாண சபை எப்படி தமிழரின் இன அழிப்பை தடுக்கும் அதிகாரங்களை எமக்குத் தரும். அதனால்தான் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல் படுத்தப்பட்டால் கூட எமது பிரச்சனைகளுக்கான தீர்வாகவோ அல்லது ஒரு இடைக்காலத் தீர்வாகவோ அமைய முடியாது என்றார்.

இந்த நிலையில் சிங்கள பேரினவாதிகளும் அவர்களைத் தூண்டிவிடுகின்ற பேரினவாதமையமான அரசும் ஏதோ மாகாணசபைகளிடம் இருக்கும் அதிகாரங்கள் தமிழருக்கு பலமாகிவிடும் எனக்கூக்குரலிடுவதும் அதிகாரங்களை அகற்றிவிட்டுத்தான் வடமகாணசபைத் தேர்தலை வைக்கவேண்டும் எனக்கூறுவதும் நகைப்புக்கிடமானது. ஆனால் இவர்கள் அறியாமையால் செய்வதல்ல இந்த ஆர்ப்பாட்டங்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். ஆனால் இப்படி எதிர்ப்புகள் உள்ளதாகக் காட்டிக் கொள்வதற்கும் சிலகாரணங்கள் உள்ளன.

முதலாவதாக, சிங்களப் பேரினவாதிகள் எதிர்ப்பதால் 13ஆவது திருத்தத்தில் தமிழருக்கு பயனுள்ளதாக ஏதோ உள்ளது என தமிழரை தவறாக நம்பவைப்பது, இரண்டாவதாக, இந்த 13ஆவது திருத்தத்திலுள்ளதைச் செயற்படுத்தவே அரசுக்கு இவ்வளவு எதிர்ப்பு உள்ளதால் இதற்கு மேல் எதையும் தமிழருக்கு வழங்குவது அரசுக்கு மிகவும் கடினமானது என எம்மையும் சர்வதேசத்தையும் நம்பவைப்பது, மூன்றாவதாக இப்போது இருக்கும் சில அற்ப அதிகாரங்களையும் பிடுங்குவதன் மூலம் சிங்கள தேசத்தின் பேரினவாத மனதைக் குளிர்வித்து தாமே சிங்கள தேசத்தின் காவலர்கள் என்பதை தொடர்ந்தும் நிலைநிறுத்தவது என்பனவாகும்.

என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது. அதை அமுல்படுத்த வேண்டியது அந்த அரசியல் யாப்பினை பாதுகாப்போம் எனக் கூறுகின்ற அரசின் கடமையாகும். ஆதைச் செய்வதும் செய்யாததும் அவர்களைப் பொறுத்தது.

அந்த 13ஆவது திருத்தத்தின்படி ஏனைய மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதைப்போல வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதும் அவர்களைப் பொறுத்தது 13இற்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலில்; இந்த தேர்தலை அரசாங்கம் நடத்தவேண்டும் என்பதற்காக நாங்கள் இதில் போட்டியிடவுள்ளளோம்’ என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் சுடலைக்கு காவல் போகிறார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தெரிவுக் குழுவிற்குள் அழைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். சுடலைக்கு காவல் போவது போல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கை எப்போதுமே தனது கட்சிக்கு வருமானம் தேடும் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை தெரிவு குழுவிற்குள் இணைப்பது தொடர்பில் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவில் எப்போதும் மாற்றம் ஏற்படாது’ என்றும் சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார்.

Related Posts