யாழ். புத்தூர்ப் பகுதியில் தினக்குரல் பத்திரிகை நிறுவன பணியாளர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு, பத்திரிகைகள் எரியூட்டப்பட்ட மனித நேயமற்ற தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் யாழ்.புத்தூர் பகுதியில் பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்ட தினக்குரல் பணியாளர் மீதான தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அக் கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகங்களின் சுதந்திர குரல்களை ஒடுக்கும் வகையில் தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் வன்முறைத் தாக்குதலாகவும் ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவும் இதனை நாம் கருதுகின்றோம்.
பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்படின் அவை சட்டரீதியான அணுகுமுறைகளுடனேயே கையாளப்பட வேண்டும். மாறாக வன்முறையின் மூலம் தீர்வினை பெற்றிட முடியாது.
எமது நாட்டில் தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான வன்முறைகள் நீடிக்கின்ற போதும் இவற்றுடன் தொடர்புடையோர் கைது செய்யப்படாதது கவனத்திற்குரியதோர் விடயமாகும்.
தினமுரசு ஆசிரியரும், ஊடகவியலாளருமான நடராசா அற்புதராசா(றமேஸ்) உட்பட பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் அவற்றை கண்டிக்காது மௌனித்ததன் விளைவே இன்றும் ஊடகங்கள் மீதான வன்முறைகள் நீடிப்பிற்கு காரணமாய் அமைத்துவிட்டது.
எனவே இடையறாது ஊடகப் பணியாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அராஜகமான, கோழைத்தனமான தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.