Ad Widget

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி!- அப்துல் கலாம் புகழாரம்

சூரியனை 121 வருடங்கள் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி என்று யாழ்ப்பாணத்’திற்கு இன்று விஜயம் செய்துள்ள முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம் யாழ். இந்துக் கல்லூரிக்குப் புகழாரம் சூடியுள்ளார் யாழ்ப்பாணத்திற்கான வருகையை மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் அறிவியலாளருமான அப்துல் கலாம் இன்று பிற்பகல் யாழ். இந்துக் கல்லூரிக்கு வருகை தந்து வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே யாழ்.இந்துக் கல்லூரிக்குப் மேற்கூறியவாறு புகழ்மாலை சூடினார்.

சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி ஆகியோர் வருகைதந்த பெருமைக்குரிய யாழ்.இந்துகக்கல்லூரி பிரார்த்தனை மண்ணடபத்துக்கு வருகை தந்த கலாநிதி. ஏ.ஜே.பி. அப்துல் கலாம், அவரது வருகையையொட்டிய நினைவுக்கல்லைத் திரை நீக்கம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்துக்கு வருகை தந்த கலாநிதி அப்துல் கலாமுக்கு கல்விச் சமூகம் மற்றும் பொதுமக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. வரலாறு காணாத அளவுக்கு யாழ். இந்துக்கல்லூரி மண்டபம் நிரம்பியிருந்தது.

கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்ட உவகைப்பட்டயத்தை வழங்கி, அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கலாநிதி அப்துல் கலாமைக் கௌரவித்தார்.

நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்.கே.காந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறீ, யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அழைக்கப்பட்ட பாடசாலைகளிலிருந்து சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் மத்தியில் நீண்ட நேரம் உரையாற்றியதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு தனது விளக்கத்தையும் வழங்கிய அப்துல் கலாம் ” கனவு, இலட்சியம், விடா முயற்சியுடன் உழைத்தால் தோல்விக்குத் தோல்வியைக் கொடுக்கலாம்” என்று மாணவர்களைத் தட்டிக்கொடுத்தார்.

இந்திய முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் 23.1.2012 காலை யாழ்.குடநாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்.பல்கலைக்கழகம், மற்றும் யாழ்.இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு விஜயம் செய்ததுடன், அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து உரையாடினார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அப்துல் கலாம் முதலாவது விஜயத்தை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு மேற்கொண்டார். இதன்போது பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர். இங்கு உரையாற்றிய கலாம், “இளைஞர்களுக்கு கனவு என்பது மிக முக்கியமானதொரு கடமையாகும், அந்த கனவு தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாது செய்வதே கனவு”

கனவு காணுங்கள், அந்த கனவுகளை நனவாக்குவதற்கு உச்சக்கட்ட முயற்சியும் செய்யுங்கள், அதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும், பொறுப்புள்ள பெறுமதியான மனிதர்களாக உருமாறுங்கள், இதேபோல் திருக்குறள் எனது வாழ்வின் பெறுமதியான வாழ்க்கைச் சித்ததாந்தமாகிப் போனது அதுவே எனது வாழ்வின் ஏற்றத்திற்கு உரமாக இருந்தது.

மேலும் அறிவுப்புரட்சி ஒன்றே சமுதாய மாற்றத்திற்கு ஓரே வழியாகும், அதுவே சமத்துவமானதும், சமாதானமானதுமான சமூகத்தை உருவாக்கும்,” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து 2.55மணியளவில் யாழ்.இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதுடன், மாணவர்களுக்கான அறிவுரைகளையும் வழங்கினார். முன்னதாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் குறித்து மகஜர் ஒன்றினை கலாமிடம் யாழ்.கடற்றொழிலாளர்கள் வழங்கினர்.

தொடர்ந்து நண்பகல் 1மணியளவில் யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற மதிய உணவு நேரத்தில் கூட்டமைப்பு, மற்றும் அரசு சார் பராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை சந்தித்து சமகால நிலமைகள் குறித்து கலந்துரையாடினார். இதில் குடாநாட்டின் பத்திரிகை ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts