கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.09.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளார்.
விவசாயத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இப்போது கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 713 விவசாயிகளுக்கு விதைநெல், கலப்பு இன சோளம் விதை, பயறு விதை, நிலக்கடலை, வெங்காய விதை, மிளகாய் விதை, வாழை உறிஞ்சிகள் போன்ற நடுகைப் பொருட்களுடன் நடமாடும் விதை சுத்திகரிப்பு இயந்திரம், பயிர் நிலங்களுக்கிடையே களைகளை அகற்றக்கூடிய இடைப்பண்படுத்தி இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா தலைமையில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் விதை நடுகைப் பொருட்கள் பிரதிப் பணிப்பாளர் ச.சதீஸ்வரன், கமநலத் திணைக்களப் பிரதி ஆணையாளர் ஈ.தயாரூபன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கனகம்மா நல்லதம்பி, நீர்ப்பாசன எந்திரி கு.செந்தூரன், உலக உணவு விவசாய நிறுவனத்தின் திட்டமிடல் அதிகாரி க.பத்மநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.




