Ad Widget

 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே 15 வரை நீடிப்பு

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைக்கப்படவிருப்பதனால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே மாதம் 15ஆம் திகதி வரையிலும், மார்ச் 31 ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே மாதம் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொழும்பு, கண்டி மற்றும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபைகளுக்கு இது பொருந்தாது என்றும் அந்த மாநகர சபைகளின் பதவிக்காலம் இவ்வருடம் இறுதியிலேயே நிறைவடையவிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநகர சபைகள் 23, நகர சபைகள் 41 மற்றும் பிரதேச சபைகள் 271 என்று மொத்தமாக 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அதில், 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய தேர்தல் சட்டமூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மாற்றம் குறித்த அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட சட்டமூலம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்திற்கு முன்னரே இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

Related Posts