Ad Widget

 விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை கவலையளிக்கிறது

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடும் திகதி ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்மானம் எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது என தமிழ் சிவில் சமூகம் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையயில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இத்தீர்மானம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையின் பெயரில் எடுக்கப்பட்டமை எமக்கு கூடுதல் வருத்தத்தைத் தருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் இத்தாமதத்தினை தேவையற்றதென்றாக கருதுகின்றனர். இந்தத் தாமதம் முழுமையாக பொறுப்புக் கூறலின் சாத்தியமற்ற தன்மையை பறைசாற்றுவதாக அவர்கள் அச்சம் கொள்கின்றனர்.

முழுத்தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த நிலைப்பாட்டை உதாசீனம் செய்யும் வகையில் அறிக்கையை தாமதப்படுத்தும் முடிவை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் அதன் ஆணையாளரும் உறுப்பு நாடுகளும் எடுத்துள்ளனர் என்பதனை நாம் மிகுந்த ஏமாற்றத்தோடு சுட்டிக் காட்டுகின்றோம். இந்த அறிவிப்பானது செப்டெம்பர் 2008இல் கிளிநொச்சியிலிருந்து மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், போர் பிரதேசங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடமையை உதாசீனம் செய்து, ஐக்கிய நாடுகள் வெளியேறிய சம்பவத்தை எமக்கு ஞாபகப்படுத்துகின்றது.

புதிதாகத் தகவல் கிடைப்பதற்க்கான வாய்ப்பு, புதிய அரசாங்கம் பல்வேறுபட்ட மனித உரிமை விடயங்களில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்பு ஆகிய இரண்டு காரணங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இவ்வறிக்கையை கால தாமதத்துக்கு காரணமாக கூறுகிறார்.

முதலாவது காரணத்தைப் பொறுத்த வரையில், புதிதாகத் தகவல்கள் கிடைக்கப் பெறவேண்டுமாயின் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவானது இலங்கைக்கு வருகை தந்து நேரடியாக எமது மக்களின் சாட்சியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு பெப்ரவரி 13ஆம் திகதி எழுதிய கடிதத்தில் ஐக்கய நாடுகள் விசாரணைக்கு ஒத்துழைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இரண்டாவது காரணத்தைப் பொறுத்த வரையில் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கவேண்டியதில்லை என்றே நாம் கருதுகிறோம். சமகாலத்தில் மனித உரிமை நிலவரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த காலம் தொடர்பான விசாரணையின் அறிக்கை வெளியிடப்படுவதற்குமிடையிலான தொடர்பு என்ன? தொடர்ந்து நிகழும் மீறல்களை கண்காணிக்கும் ஐக்கி நாடுகள் விசாரணையின் அதிகாரத்தைப் பற்றி நாம் அறிவோம். ஆனால் இது அறிக்கையை வெளியிடுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது.

எம்மைப் பொறுத்தவரையில் கடந்த ஒருமாத காலப்பகுதியில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களை நேரடியாகப் பாதிக்கும் விடயங்களில் காத்திரமான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை. வடக்கு கிழக்கை விட்டு இராணுவத்தை விலக்கப் போவதில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இராணுவத்திற்கும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வலிகாமம் ஆகிய பகுதிகளில் சிறுபகுதியளவில் மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் முன்னைய அரசாங்கத்தின் கீழ், கைவிடப்பட்ட ஒருமாதிரி குடியேற்றத் திட்டத்தேயே இந்த அரசாங்கமும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீள் சுழற்சிசெய்கிறது. சம்பூர் (திருகோணமலை), முள்ளிக்குளம் (மன்னர்), கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு) உயர் பாதுகாப்புவலயங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரையும் ஐ. நா.வின் காணாமல் போனார் தொடர்பான குழுவையும் நாட்டுக்கு வருமாறு இலங்கை வெளியுறவு அமைச்சர் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு பெப்ரவரி 13ஆம் திகதி எழுதிய கடிதத்தில் விடுத்துள்ள அழைப்பு வெறுமனே தாம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு ஒழுக நடக்கின்றோம் என்றவோர் பிம்பத்தைக் கட்டியெழுப்பவே அன்றி உண்மையான பொறுப்புக்கூறலுக்கான அடையாளமாகக் கருதுவதற்கில்லை.

அவ்வாறாயின் அரசாங்கம் ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டிற்குள் முதலில் அனுமதிக்கவேண்டும். ஆனால், இதற்கு அரசாங்கம் தயாரில்லை. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 2014 தீர்மானத்தையேனும் ஏற்க அரசாங்கம் தயாரில்லை. இலங்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை என்பதை எமது 2015 பெப்ரவரி 12ஆம் திகதியின் கடிதம் மூலம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேற்கூறிய காரணங்களுக்காக விசாரணை அறிக்கையைத் தாமதப்படுத்துவதற்கான நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என நாம் கருதுகிறோம். ஐ.நா விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிக்குமாறு அழைப்பு விட நாம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வேண்டுகிறோம். அவ்வாறு வேண்டாத விடத்து அறிக்கையைத் தாமதப்படுத்தும் முடிவானது அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதென்ற வாதத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துவிடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts