Ad Widget

 பொதுத் தேர்தலை புறக்கணிப்போம் – வலி.வடக்கு மக்கள்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுத் தேர்தலை புறக்கணிப்பதோடு தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கூறினார்கள்.

யாழ்.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்’ கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே அம்மக்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் தொடர்ந்து கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியமைக்கு அமைவாக நாங்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

கடந்த 2002ஆம் ஆண்டு நாம் எமது சொந்த இடங்களிலுள்ள ஆலயங்களுக்கு சென்றபோது, எமது உடமைகளுடன் எமது வாகனத்தில் சென்றோம். பின்பு உடமைகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு அவர்களது வாகனத்தில் சென்று வந்தோம். ஆட்சி மாற்றத்தின் பின்பும் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்கின்றது.

விடிவு கிடைக்கும் என்று எமக்கு நம்பிக்கை இல்லை. 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எமது சொந்த இடங்களுக்கு நாங்கள் சுதந்திரமாக செல்லவேண்டும். இல்லையென்றால் நாம் பல போராட்டங்களை முன்னெடுப்பதோடு, பொதுத்தேர்தலையும் புறக்கணிப்போம். இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் கொண்டு செல்லவேண்டும். எமது உரிமைகள் எமக்கு கிடைக்கவேண்டும் என்றனர்.

Related Posts