Ad Widget

 ‘பிள்ளையார் கோவிலை அழித்து விட்டு தென்னை மரங்களை பாதுகாக்கின்றனர்’

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்துவிட்டு கோயிலுக்கு அருகில் இருந்த தென்னை மரங்களை இராணுவத்தினர் பாதுகாக்கின்றனர் என்று மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தைப்பூச தினத்தை முன்னிட்டு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை (03) மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வழிபாட்டுக்காக சென்றிருந்தார்.

இதன்போது, மக்களை அழைத்து சென்று ஆலய வழிப்பாட்டை முடித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் இந்த கோயிலுக்கு நாம் வந்து வழிப்பாட்டை மேற்கொண்டோம். பின்னர் தைப்பூச தினத்திலே பொங்கல் பொங்கி வழிபட அனுமதி பெற்று வந்துள்ளோம். இங்கு வந்ததிலுள்ள சந்தோசம் மக்கள் முகங்களில் தெரிகின்றது. இந்த சந்தோஷம் நிலைக்க இராஜஇராஜேஸ்வரி அம்மன் தான் அருள்புரிய வேண்டும்.

இங்கிருந்த பிள்ளையார் கோவிலை இடித்து அழித்து விட்டார்கள் என்று இங்கு வந்த போது சிலர் கூறினார்கள். ஆனால் கோயிலின் அருகில் இருந்த தென்னை மரங்களை அழிக்காமல் பரமாரிகின்றார்கள். ஏனெனில் அதிலிருந்து இளநீர், தேங்காய் என்பவற்றை பெற்று கொள்வதற்காக முன்னைய அரசாங்கம் கோயில்களை இடித்தழித்துவிட்டது.

எஞ்சியுள்ள கோயில்களுக்கு சென்று வழிபட மிகவிரைவில் எமக்கு அனுமதி கிடைக்கும். அதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றேன்.

மீள்குடியேற்றமும் மிக விரைவில் நடைபெறும். அதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் கலந்துரையாடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பு கொண்டு மிகவிரைவில் மீள்குடியேற்றத்தை நிறைவேற்றுவோம்.

இங்கிருந்த மக்கள் விவசாயம் மற்றும் கடற்றொழிலே செய்து வந்தனர். அவர்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றதனால் அவர்களின் வாழ்வாதாரமும் அற்று போயுள்ளது.

சில விவசாயிகள் மீள்குடியேற்றம் சற்று தாமதம் ஆனாலும் பரவாயில்லை, உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தங்கள் விவசாய நிலங்களை விவசாயம் செய்வதற்காக பெற்றுத்தாருங்கள் என என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் என எனக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.

Related Posts