Ad Widget

 த.தே.கூட்டமைப்பை நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் – பசுபதி சீவரத்தினம்

எமது மக்களுக்காக அரசியல் துணிச்சலோடு எமது இணக்க அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த எமது அரசியல் வழிமுறை நோக்கி காலம் கடந்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வந்திருப்பதை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

Pasupathy- Sevaraththinam

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது மக்கள் பட்டுணர்ந்த துயரங்களும் நாம் கற்றுணர்ந்த அனுபவங்களுக்கும் இணக்க அரசியல் வழிமுறையே, மாற்றத்திற்கான வழிமுறை என்ற உண்மையை எமக்கு கற்றுத்தந்தன. இந்த வழிமுறை நோக்கி விரைந்து வருமாறு நாம் தீர்க்கதரிசனமாக சகல தமிழ் அமைப்புகளை நோக்கியும் அழைப்பு விடுத்திருந்தபோதும் அதை அன்று யாரும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

இணக்க அரசியல் வழிமுறை என்பது சரணாகதி அரசியல் என்று இழித்துரைத்தார்கள். ஆனாலும் நாம் எமது மக்களுக்காக அரசியல் துணிச்சலோடு எமது இணக்க அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். வெறுமனே அறிக்கை விட்டு காலம் தள்ளும் எதிர்ப்பரசியல் எமது மக்களுக்கு அழிவுகளையும் அவலங்களையும் தவிர எந்த இலக்கையும் பெற்றுத்தராது என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தோம்.

எமது பாதையில் அழிவுகள் இல்லை, அவலங்கள் இல்லை என்பதை நாம் நடைமுறையில் காண்பித்தோம். எதிர்ப்பரசியல் என்பது சுலபமானது. மக்களை அழிவுகளுக்குள் தள்ளிவிட்டு தாம் மட்டும் தப்பித்துக்கொள்ளும் சுயலாப நோக்குடையது. ஆனாலும் இணக்க அரசியல் வழிமுறை கடினமானது. அதை முன்னெடுப்பதுக்கு அர்ப்பணங்கள் தேவை.

மக்கள் மத்தியில் நீடித்து நின்று உழைக்கும் செயற்பாட்டு திறன் அதற்கு தேவை. மதிநுட்ப சிந்தனையே அதன் அடிப்படை கொள்கையாகும். 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஆரம்ப நடைமுறையாக மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுக்கும் நாமே எமது இணக்க அரசியல் வழிமுறையில் முன்னின்று உழைத்து வந்திருக்கிறோம். அரசியல் பேரம் பேசும் பலத்தை மக்கள் எமக்கு அதிகமாக வழங்கியிருந்தால் எமது அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளை இன்னமும் முழுமையாகவே நாம் நடத்தி முடித்திருப்போம்.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரைகுறை தீர்வு என்றும் ஒன்றுக்கும் உதவாத தீர்வு என்றும் உழுத்துப்போன தீர்வு என்றும் இழித்துரைத்தவர்கள் இறுதியில் எமது வழிமுறையை ஏற்று எவ்வாறு மாகாணசபை தேர்தலில் போட்டியிட முன்வந்தார்களோ, அது போலவே இன்று தமிழரசு கட்சி உறுப்பினரும் வட மாகாணசபை முதல்வருமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் நாம் கூறி வந்த இணக்க அரசியல் வழிமுறை மூலமே, எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று காலம் கடந்தாவது கூறியிருக்கின்றார்.

இதை அன்றே ஏற்றிருந்தால் தமிழ் பேசும் மக்கள் இத்தனை அழிவுகளை சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்காகது. ஆனாலும் மனந்திருந்தி தீர்வின் திசை நோக்கி வந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுவது போல், நாம் மாவிலை தோரணம் கட்டி தொங்க விட்டு நேசமுடன் கை நீட்டி வரவேற்கின்றோம்.

உண்மையாகவே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பற்றுறுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்குமாயின் கடந்த காலங்களை போல் அடிக்கடி நிறம் மாறாமால் எமது வழிமுறையை உறுதியுடன் ஏற்று செயற்பட வேண்டும் என வெர் தெரிவித்துள்ளார்.

Related Posts