Ad Widget

தவறை உணர்ந்த மஹிந்த

தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், 16 வயதுக்கு குறைந்தவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்த பணம் உள்ளிட்ட 7 முறைகளில் சம்பாதித்த பணம் தொடர்பில் அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யோஷித உள்ளிட்ட ஐவருக்கும், இந்த சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், சீ.எஸ் .என் நிறுவனம், இதுவரை காலமும் ஊடக நடவடிக்கைகளைக் கையாளவில்லை.

போதைப்பொருட்களையே விற்பனை செய்துள்ளது என அர்த்தப்படுகிறது. பயங்கரவாதத்தைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவரது மகனையே அந்த சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தான், நல்லாட்சியோ?’ என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் செய்த தவறுகள் தற்போது நினைவுக்கு வருகின்றன என்றும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வி, கள்ளநோட்டுக்களைத் தயாரித்தபோது, பிரேமதாசவினால் நாட்டுக்கு செய்யப்பட்ட நல்ல விடயங்களைக் கருத்திற்கொண்டு, இவ்விடயத்தை கையாள்வதைக் கைவிடுங்கள் என்று நான் அன்று உரைத்தேன். பாசிக்குடாவில், ஜனாதிபதி ஒருவரின் மகன் செய்த பிரச்சினையைப் பார்த்து நான் அமைதி காத்தேன். இவை தான் நான் செய்த தவறுகள். நான் அன்று செய்த தவறுகள் இன்று எண்ணி கவலைப்படுகிறேன்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts