Ad Widget

 ‘சுன்னாகம் பொலிஸார் எனது மகனின் படத்தின் நெற்றியில் பொட்டு வைத்திருந்தனர்’

இராணுவத்தினரால் காலில் சுட்டுக் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் தொடர்பில் ஒரு கோப்பை வைத்திருந்த சுன்னாகம் பொலிஸார், அதில் ஒட்டப்பட்டிருந்த எனது மகனின் புகைப்படத்தில் நெற்றியில் சிவப்பு கலரில் பொட்டு வைத்திருந்தனர். ஏன் பொட்டு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அது உனக்குத் தேவையில்லாத விடயம் எனக் கூறி என்னை அங்கிருந்து துரத்தினர் என காணாமற்போன சிவசோதி திவ்வியதாசனின் தாயார் சாட்சியமளித்தார்.

missing

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

உரும்பிராய், உதயசூரியன் பகுதியிலுள்ள எமது வீட்டில் நித்திரையில் இருந்த நேரம், 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இரவு 11.40 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர் எனது மகனை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். தடுக்கச் சென்ற என்னையும் எனது அம்மாவையும் அடித்தனர். அதனையும் மீறி தடுக்க முற்பட்ட போது, மகனின் காலில் துப்பாக்கியால் சுட்டு மகனை இழுத்துச் சென்றனர்.

மகன் கடத்தப்பட்டது தொடர்பில் மறுநாள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியச் சென்ற போது, என்னை சுமார் 4 மணித்தியாலங்கள் பொலிஸ் நிலையத்தில் காக்க வைத்த பின்னரே முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

தொடர்ந்து 2 மாதங்களுக்கு பின்னர் என்னை தொடர்புகொண்ட எமது பிரதேச கிராம அலுவலர் உங்கள் மகனின் புகைப்படம் வேண்டும் என சுன்னாகம் பொலிஸார் கேட்கின்றனர் எனக் கூறினார். அதற்கிணக்க புகைப்படத்தை கொண்டு சென்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொடுத்தேன்.

தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, பொலிஸ் நிலையத்திலிருந்து அழைப்பு வந்து அங்கு சென்றபோது, பைல்களை (கோவை) வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய மகனின் புகைப்படம் ஒப்பட்டப்பட்ட பைலும் காணப்பட்டது. எனது மகனின் புகைப்படத்தின் நெற்றியில் சிவப்பு மையால் வட்டமிடப்பட்டிருந்தது. ஏன் அவ்வாறு வட்டமிட்டுள்ளீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, அது உனக்குத் தேவையில்லாத விடயம் என எனக்குக் கூறி, என்னை அங்கிருந்து துரத்தினர் என்றார்.

Related Posts