Ad Widget

 கல்வியங்காடு செங்குந்தா சந்தையின் நிலையான வைப்பு நிதியை எடுக்கவேண்டாம்

கல்வியங்காடு செங்குந்தா சந்தையிலிருந்து பெறப்பட்ட வருமானங்களின் நிலையான வைப்புப் பணத்தை எடுத்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

CVK-Sivaganam

இது தொடர்பில் அவைத்தலைவர் வியாழக்கிழமை (22) மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘கடந்த 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் செங்குந்தா சந்தைத்தொகுதி புதிய கட்டிடத் தொகுதி கடைகளை கேள்வி அறிவித்தல் மூலம் வாடகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த உரிமப்பணத்தை சந்தையின் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நிலையான வைப்பிலிடப்பட்டது.

நகர அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் நிதியும் இந்த நோக்கத்துக்காக வைப்பிலிடப்பட்டது.

2006ஆம் ஆண்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் காரணமாக அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படாமையால், நிலையான வைப்புப் பணம் அப்படியே பேணப்பட்டு வந்தது.

இந்தப் பணத்தை தாங்கள் வேறு தேவைகளுக்காக எடுக்கவுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

செங்குந்தா சந்தையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடரவேண்டியுள்ளதால், அதற்கென நிலையான வைப்பிலிடப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்துமாறு கோரப்படுகின்றது என அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் பிரதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சரின் செயலளார், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Posts