Ad Widget

சிறைபிடிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் விடுதலை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் அனுமதியின்றி கடலட்டை தொழில் ஈடுபட்டு, கட்டைக்காடு மீனவர் ஒருவரை தாக்கிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள் கட்டைக்காடு மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸார் மற்றும் பிரதேச செயலார் ஆகியோரின் சமரச முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 165 மீனவர்கள், 55 படகுகளில் அத்துமீறி நுழைந்து கட்டைக்காட்டுப் பகுதியில் கடலட்டைத் தொழிலில் ஈடுபட்டனர். இவர்களின் இந்தச் செயலை, கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கட்டைக்காடு மீனவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதன்போது, தட்டிக் கேட்ட மீனவர்களை, வெளிமாவட்ட மீனவர்கள் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, ஆத்திரங்கொண்ட கட்டைக்காடு மீனவர்கள், ஒன்றிணைந்து கடலுக்குச் சென்று சட்டவிரோதமான முறையில் கடலட்டையில் ஈடுபட்ட 165 மீனவர்களையும் பிடித்துக் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் கட்டைக்காடு கடற்கரையில் பதற்றம் நிலவியது. சம்பவத்தை அறிந்த பிரதேச செயலர் உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்து சென்று கட்டைக்காடு மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து பொலிஸார், கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோரும் அங்கு சென்று மீனவர்களை சமரசம் செய்தனர். தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் வெளிமாவட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டவர்கள், புத்தளம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

fish-men-3

fish-men-2

fish-men-1

Related Posts