Ad Widget

ஆளுநர் அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார்

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவின் பேச்சு, நடவடிக்கை வேறுவிதமாக இருக்கின்றது. அவர் அரசியல்வாதியாக இருந்தவர். மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். அதனால், அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். பொது நூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘முன்னர் இருந்த ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார, அரச உத்தியோகஸ்தர்களின் பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகினார். இப்போதுள்ள ஆளுநரை நாங்கள் குறைகூறவில்லை. எமக்கும் அவருக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். எவ்வாறு அது சாத்தியமாகும் என்பது தொடர்பில் எனக்கு இப்போது கூற முடியாது.

ஆனால், அவர் தனது பதவிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்துகொண்டால் எந்த சிக்கலும் ஏற்பாடாது. அவர் ஒரு நல்ல மனிதர்’ என்றார்.

இங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடமாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். தமது மாவட்டங்களிலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எமக்கு தெரிவித்திருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வித்தியாசமான பிரச்சனைகள் உண்டு.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தெற்கில் இருந்து வரும் மீன்பிடியாளர்கள் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.
தெற்கில் இருந்து மீன்பிடிப்பதற்கு முல்லைத்தீவுக்கு வருவதாக முன்னைய அமைச்சரால் 78 பேர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்போது 300 க்கு மேற்பட்ட மீனவர்கள் அங்கு வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மன்னார் மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளால் பிரச்சனை. கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவில், கடற்படையினரால் ஏற்படும் பிரச்சனைகள். யாழ் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் என பல விடயங்கள் இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இவ் விடயங்கள் தொடர்பாக பரிசீலுப்பதற்கு முதலமைச்சரின் செயலாளர், மீன்பிடி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர்களை உள்ளடக்கி பேராசிரியர் சூசை ஆனந்தனின் ஆலோசனையின் கீழ் ஒரு குழு அமைத்து மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை உள்ளடக்கி அவற்றின் அதிகாரங்கள் தொடர்பாக பேராசிரியரிடம் இருந்து அறிக்கை ஒன்றைப் பெறவுள்ளோம்.

அதனைத் தொடர்ந்து வடமாகாணத்துக்குரிய அதிகார சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த அதிகார சபைக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கினால் இவை தொடர்பான அதிகாரங்கள் முகாமைத்துவங்கள் அனைத்தும் மேற்குறித்த அதிகார சபையின் கீழ் இருக்கும். மற்றவர்களின் உள்ளீடுகள் இல்லாமல் போகும் எனவே அதற்குரிய ஏற்பாடுகள் விரைவில் நடைபெறவுள்ளன.

மேலும் இந்திய இழுவைப்படகுகளின் பிரச்சனை மத்திய அரசுக்குரியது. அது தொடர்பாக விரைவில் மத்திய அரசுடன் பேசி நடைமுறைச்சாத்தியம் உள்ள தீர்வு ஒன்றினை பெறுவோம் என்றார்.

Related Posts