Ad Widget

ஹெல உறுமயவின் குற்றச்சாட்டை விக்னேஸ்வரன் நிராகரிப்பு!

வடமாகாண தமிழ் மக்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் அவர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமே பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளதென முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஹிக்கடுவயில் இடம்பெற்ற 32வது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் பிரிவினைவாத மற்றும் இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், இவை தேசிய நல்லிணக்கத்திற்கு தடங்கலாக இருப்பதாகவும், வடமாகாணசபை 2015ஆம் ஆண்டில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமான நிதியை மட்டுமே செலவிட்டுள்ளது எனவும் அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடிதத்தில் , ஒரு சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது இனவாதமாகாது அது தேசிய நல்லிணக்கத்திற்கும் தடையாகாது. தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் இணைந்து செயலாற்றுவதாகவும், இந்த நிலையில் மாகாணசபையின் ஆட்சியை குறைத்து மதிப்பிடவேண்டாம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஹிக்கடுவ பகுதிக்கு வர முடியாமை தொடர்பாக முன்னதாகவே தான் அறிவித்தல் விடுத்ததாகவும், அன்றைய தினம் வெளியிடப்பட்ட மலருக்கான செய்தியும் அனுப்பியதாகவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முதலமைச்சர்கள் மாநாட்டை தாம் திட்டமிட்டே புறக்கணித்ததாக சொல்லப்படுவதை ஏற்க முடியாது என்பதுடன், வடமாகாண மக்களின் கேள்விகளை தவிர வழிப்போக்கர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எனினும் தாம் பதில் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் 2015ஆம் ஆண்டில் 20 வீத நிதியை மட்டும் செலவிட்டு மீதியை திறைசேரிக்கு அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 95 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளது. எனவே இப்படியான அறிக்கைகளை விடுவதற்கு முன்னர் உண்மை என்ன? என்பதை அறிந்து கொள்வது நல்லதாகும்.

இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தன்னுடைய கடமைகளை சரியாக செய்யும். என்பதுடன் இப்படியான பொறுப்பற்ற அறிக்கைகளை விடும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவர்களின் செயற்பாடுகளே உண்மையில் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts