Ad Widget

ஹர்த்தாலுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்- ஆனந்தன் எம்.பி

வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் நடவடிக்கைக்கு, இன, மத, மொழி பேதங்களை கடந்து முழுமையாக ஓத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வன்முறைக்கு எதிரான சமூக அமைப்பு சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதுடன் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 16 ஆம் திகதி வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் மிகவும் கொடூரமான முறையில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி பிரதிநிதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னனி பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி பிரதிநிதிகள், அரச – தனியார் பஸ் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பிரஜைகள் குழு, வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்விச் சமூகத்தினர், வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள், தனியார் கலவிநிலைய பிரதிகள், அரச அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், மாணவர்கள் எனப்பலரும் கடந்த 19 ஆம் திகதி வவுனியாவில் உள்ள எனது அலுவலகத்தில் ஒன்று கூடி சமூக வன்முறைக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதுடன், முழு அளவிலான ஹர்த்தாலையும் மேற்கொள்ள தீர்மானித்திருந்தோம்.

அதனடிப்படையில் செவ்வாய்கிழமை வவுனியாவில் பாரிய அளவில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன், அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜரும் கையளிக்கப்பட்டதுடன், பாடசாலைகளில் ஒரு மணிநேரம் மணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டம் மட்டுமன்றி வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. அதன் பின் இன்றைய தினம் வவுனியா மாவட்டம் மட்டுமன்றி வடக்கு முழுவதும் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு முற்றாக ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒன்றுபட்டுள்ளதுடன் வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சங்கத்தினர், தனியார் பஸ் சங்கத்தினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், ஊடகங்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும் பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கி இந்த முழுமையான ஹர்த்தால் ஊடாக மாணவியின் மரணத்திற்கான நீதியை கோரியுள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அரசு நிறுவப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் வித்தியா தொடக்கம் ஹரிஸ்ணவி வரை பாடசாலை மாணவிகளுக்கு எதிரான வன்புனர்வுகளும், கொலைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஒட்டு மொத்த மக்களும் இணைந்து நீதி கோரியுள்ள இந்த நிலையில் இந்த அரசாங்கம் இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வருவதுடன், இனிவரும் காலங்களில் இலங்கையில் உள்ள சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி இவ்வாறான ஒரு கறை படிந்த சம்பவம் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு, நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படக் கூடிய வகையில் சட்டங்களை முழுமையாக அமுல்படுத்தி இவ்வாறான சிறுவர், பெண்கள் மீதான வன்புனர்வு குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அவ்வாறான ஒரு மாற்றத்தின் மூலமே இந்த அரசாங்கம் நல்லாட்சி தான் நடத்துகின்றது என்ற நிலையை மக்கள் மனங்களில் உருவாக்க முடியும். வெறுமனமே பெயரளவில் மட்டும் நல்லாட்சி எனக் கூறி கொண்டு, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதும், அவற்றுக்கான தீர்வுகள் இன்றி விசாரணைகள் வருடக் கணக்கில் இழுபடுவதும் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது.

இதேவேளை, இன்றைய (நேற்று) தினம் நீதிகோரியும், இவ்வாறான வன்புனர்வுச் சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது எனத் தெரிவித்தும் வடபகுதியில் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களுக்கும் வன்முறைக்கு எதிரான சமூக அமைப்பு சார்பில் எமது கவலையையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts