Ad Widget

ஸ்ரீலங்கா பணியாளர்களை காப்பாற்ற விசேட குழு; வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கப்பல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சு, கடற்படை மற்றும் விமான படையினருடன் இணைந்து இன்று விசேட குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஏரீஸ் 13 என்ற எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி மாலை 5.30 அளவில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சோமாலியாவின் மொகடிசூ துறைமுகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.

ஏரீஸ் 13 என்ற கப்பலுடனான தொடர்புகள் கடந்த 13ஆம் திகதி முதல் துண்டிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஸ்ரீலங்காவின் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக இலங்கை பணியாளர்கள் 8 பேர் குறித்த கப்பலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொமரோஸ் கொடியுடன் கப்பல் பயணித்துள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிறுவனமொன்று அதன் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை, கப்பலிலுள்ள ஸ்ரீலங்கா பணியாளர்கள் 8 பேரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், வெளிநாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா தூதுக்குழுவினருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts