Ad Widget

ஸ்ரீதரனின் கருத்தால் சபையில் பெரும் சலசலப்பு!

யுத்தம் என்ற போர்வையில் அரசாங்க தரப்பினரால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்தால் நாடாளுமன்றில் கூட்டமைப்பினருக்கும், நீதி அமைச்சிற்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சபையில் உரையாற்றிய ஸ்ரீதரன், கடந்த கால யுத்தத்தின் போது அரச படையினரால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது பல்வேறு சர்வதேச அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது.

யுத்தத்தினால் தமிழர்கள் மாத்திரம் அல்ல. எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டனர். கைக் குழந்தைகள் உட்பட பலர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர். எனவே தமிழ் மக்களுக்காக மாத்திரம் வாதிடுவது தவறாகும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஸ்ரீதரன், நாம் தமிழ் மக்களுக்காக மாத்திரம் குரல் எழுப்பவில்லை. அனைவருக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையிலேயே இது குறித்து மீண்டும் பேச வேண்டியுள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், ‘நடந்தது நடந்து விட்டது. நாம் அரசாங்கம் என்ற வகையில் இருக்கின்ற மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களை சகோதரத்துவத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

அதைவிடுத்து நீங்கள் மீண்டும் மீண்டும் பிரிவினை, யுத்த குற்றம், தண்டனை என்று கூறிக்கொண்டிருப்பதால். இந்த நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.’ என்றார்.

Related Posts