Ad Widget

வைத்திய சாலையில் வைத்தியர் இல்லாமையினால் ஒருவர் சாவு!

dead-footநேற்று முன்தினம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் கடமையில் இல்லாத காரணத்தினால் ஒருவர் உயிர்இழந்துள்ளார்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சோமலிங்கம் சண்முகநாதன் (வயது 32) என்பவரே உயிரிழந்தார்.

மேசன் வேலை செய்யும் சண்முகநாதன் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் தனது கைத்தொலைபேசியை சார்ஜில் போட எத்தனித்துள்ளார். எனினும் குறித்த “பிளக்கில்’ ஒரு வயர் கழன்று இருந்ததை அவர் கவனிக்கவில்லை. அதைக் கவனிக்காது வயரைக் கையால் பிடித்தபோதே மின்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் நின்றிந்த தரையும் ஈரமாக இருந்தது என்று கூறப்படுகின்றது.

மின்தாக்குதலுக்கு உள்ளான அவரை உடனடியாக அங்கு நின்ற ஏனையவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எனினும் வைத்தியசாலையில் மருத்துவர் பணியிலிருக்காது தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று உயிரிழந்தவரது உறவினர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையில் பணியிலிருக்கவேண்டிய மருத்துவர் அந்த நேரம் அங்கு இல்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு கேட்டோம். “”சம்பவதினமன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிற்பகல் மருத்துவர் தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அங்கு பதில் வைத்தியர் நியமிக்கப்படவில்லை. அந்த வைத்தியசாலைக்கு மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரியபோதும் எவரும் விண்ணப்பம் செய்யவில்லை. அதனால் குறித்த வைத்தியசாலையில் பதில் மருத்துவர் எவரும் இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

Related Posts