Ad Widget

வைத்தியர்கள், பொறியியலாளர்களுக்கான வெற்றிடங்களிற்கு உரிய ஆளணி நிரப்பப்பட வேண்டும்: முதல்வர் விக்கினேஸ்வரன்

வடக்கு மாகாணத்திலே வைத்தியர்கள்,பொறியியலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் தரத்தினில் மட்டும் 641 வெற்றிடங்கள் காணப்படுகின்றது எனவே இவ்வாறு காணப்படும் வெற்றிடங்களிற்கு உரிய ஆளணி நிரப்பப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் 9 மாகாண முதலமைச்சர்கள் மாநாடு நேற்றைய தினம் வட மத்திய மாகாணத்தின் கபரனப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இதில் முக்கிய அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள், அதிகார சபைகளின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போதே வட மாகாண முதலமைச்சர் மேற்படி கோரிக்கையினை விடுத்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலே வைத்தியர்கள், பொறியியலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் தரத்தினில் மட்டும் 641 வெற்றிடங்கள் காணப்படுகின்றது. எனவே இவ்வாறு காணப்படும் வெற்றிடங்களிற்கு உரிய ஆளணி நிரப்பப்பட வேண்டும். இவ் ஆளணி வெற்றிடங்கள் மத்திய நிர்வாகங்களின்கீழ் உள்ளது. இந்த நிலையிலேயே மாகாணத்தில் உள்ள மத்திய அலுவலகங்களும் இயங்குகின்றன.

இதேபோன்று மத்திய அமைச்சின் கீழ் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் மாகாண வைத்தியசாலைகளில் அதிக தாதியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதேபோன்று மத்திய அரசின் கீழ் உள்ள அலுவலகங்களில் அதிக வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு பட்டதாரிகளை நியமிக்க முடியும் அதே நேரம் மாகாணத் திணைக்களங்களின் கீழ் காணப்படும் வெற்றிடங்களில் ஆசிரியர்கள் உட்பட 1171 பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க முடியும் இதற்கான நடவடிக்கையாக விண்ணப்பங்களை கோரியுள்ளோம். எஞ்சிய பட்டதாரிகளிற்கு மத்திய அரசின் கீழ் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

Related Posts