Ad Widget

சங்கானை வைத்தியசாலையில் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்

‘வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மக்களுக்கான சேவையை அர்ப்பணிப்புடன் ஆற்றிவருகின்றனர்’ என வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியதிகாரி தெரிவித்தார்.

சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘சங்கானை வைத்தியசாலை வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையிலும் இருக்கும் வைத்தியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

சண்டிலிப்பாய், சங்கானை என சனத்தொகை அடர்த்தி கூடிய பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலைக்கு நாளாந்தம் பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர்.

அவர்களுக்கான மருத்துவ சேவையை வைத்தியர்கள் சலிப்பின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதைவிட உடுவில் மற்றும் தெல்லிப்பழை ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களும் இந்த வைத்தியசாலைக்கு வருகின்றனர்.

அதிகளவான மக்கள் வருகின்ற போதும், ஆளணி, வளங்கள் என்பன இங்கு பற்றாக்குறையாக இருகின்றன. எனினும் நாங்கள் சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்’ என்றார்.

‘இந்தச் செய்தியால், எதிர்காலத்தில் இந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் நியமிக்கப்படுவதில் சிக்கல்கள் ஏற்படும். அவதூறு பரப்படும் என்ற எண்ணத்தில் வைத்தியர்கள் கடமையாற்ற முன்வரமாட்டார்கள்.

நாங்கள் ஒரு நாளைக்கு 15 மணித்தியாலங்கள் வரையில் சேவை செய்தும் இவ்வாறான அவதூற்றால் மிகுந்த மனவேதனை அடைகின்றோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

சங்கானை வைத்தியர் தொடர்பில் மக்கள் விசனம்

Related Posts