Ad Widget

வைத்தியதிகாரியின் அலட்சிய பதில் : வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல்!!

மழை என்றால் நுளம்பு வரும் தானே’ என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி அலட்சியமாக பதிலளித்து, வைத்தியசாலைக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் சிவப்பு அறிவித்தல் ஒட்டவைத்துள்ளார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர், அச்சுவேலி பொலிஸார், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அச்சுவேலி நகரப் பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வளாகத்தையும் பார்வையிட்டனர். அங்கு கழிவு வாய்;க்கால்கள் சுத்தம் செய்யப்படாமை, இளநீர்க் கோம்பைகள் அதிகளவு இருந்ததுடன், அவற்றுக்குள் நுளம்பு குடம்பிகள் அதிகளவு காணப்பட்டன.

வளாகத்தை துப்பரவு செய்யாமை தொடர்பில் பொறுப்பு வைத்தியதிகாரியிடம் வினாவியபோது, மழை என்றால் நுளம்பு வரும் தானே என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

இவ்விடயம் கோப்பாய் சுகாதார வைத்தியதிகாரி கே.மகேந்திரத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, அவரது கையொப்பத்துடன், எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் வைத்தியசாலை வளாகம் துப்பரவு செய்யப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்ட சிவப்பு அறிவித்தல் வைத்தியசாலை முன் ஒட்டப்பட்டுள்ளது.

Related Posts