Ad Widget

வைத்தியசாலை கழிவுகளை கல்லுண்டாயில் கொட்டக்கூடாது; சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவிப்பு

கல்லுண்டாய் பகுதியில் யாழ். மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கமிவுகள் கொட்டப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களது போராட்டம் முக்கிய தீர்மானங்களை அடுத்து இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

ainkaranesan

யாழ். மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் கல்லுண்டாயில் கடந்த காலங்களில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்களும் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களும் பல அசௌகரியங்களுக்கும் நோய்த்தாக்கங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு குறித்த பிரதேசத்தில் மாநகர சபை கழிவுகளைக் கொட்டக்கூடாது என கோரி கடந்த மூன்று தினங்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும் வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் நேற்றையதினம் பகுதி மக்கள் , மாநகர சபை ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தற்காலிக தீர்வு ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளனர். அதற்கமைய இன்று காலை வடக்கு மாகாண சுற்றுச்சூழல் அமைச்சரின் அலுவலகத்தில் அனைவரையும் இணைத்ததான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பகுதி மக்கள் இணைந்து கல்லுண்டாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தாங்களாகவே உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினர் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றினை என்னிடம் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி சில தீர்மானங்களுடன் தற்காலிக முடிவுகளை எட்டியுள்ளோம். அதனையடுத்து தாங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாகவும் எங்களுடைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் தெரிவித்துள்ளனர்.

கல்லுண்டாய் பகுதியில் இன்றிலிருந்து மருத்துவ மனைக் கழிவுகளை கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாநகர சபை ஆணையாளரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலக்கழிவு எதிர்வரும் ஒரு வாரம் மாத்திரம் கொட்ட முடியும் என்றும் அதற்குப் பின்னர் மாநகர சபை தனக்கு தகுந்த ஒரு இடத்தை நாடவேண்டும் . அத்துடன் இராணுவமும் குறித்த இடத்தில் மலக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றது.

எனவே இன்றிலிருந்து குறித்த பகுதியில் இராணுவம் மலக்கழிவு கொட்டக்கூடாது . இதனை உள்ளூராட்சி அமைச்சு இராணுவத்திற்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும்.

மேலும் மலக்கழிவு மற்றும் வைத்தியசாலைக் கழிவு அல்லாத கழிவுப் பொருட்கள் எதிர்வரும் 6 மாத கலங்களுக்கு கல்லுண்டாயில் கொட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

Related Posts