Ad Widget

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அனுமதியின்றி அழைத்துச் சென்ற பொலிஸார்

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஊழியர், வைத்தியசாலையின் அனுமதியுமின்றி பொலிஸாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என’ யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். நகரப் பகுதியில் இயங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளரின் தாக்குதலுக்குள்ளான ஊழியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார். தாக்குதலை மேற்கொண்ட உரிமையாளரை கைது செய்யும்படி செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்வதற்காக பொலிஸார் தாக்குதலுக்குள்ளான ஊழியரை வைத்தியசாலையில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை (07) இரவு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வினாவிய போதே யாழ். போதனா வைத்தியசாலை பிரதிபிணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நள்ளிரவு 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவரை அழைத்துச் செல்வதற்கு அனுமதி பெற்றமைக்கான எந்த ஒரு பதிவும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வைத்தியசாலையின் ஸ்கேன் இயந்திரம் சிறு பழுது காரணமாக தொழிற்படவில்லை. இந்நிலையில், குறித்த நபர் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்’ என பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை தனது பணியை முடித்த ஊழியர், தனது வீட்டுக்கு செல்வதற்கு பஸ் நிலையம் சென்றுள்ளார். இதன்போது கடை உரிமையாளர் அலைபேசியில் தொடர்பு கொண்டு, மேலதிக வேலை இருப்பதாக கூறி ஊழியரை அழைத்துள்ளார்.

தனது ஊருக்கு செல்லும் இறுதி பஸ் வரும் நேரம் நெருங்கி விட்டது எனக் கூறிய ஊழியர், வேலையின் விவரத்தையும் பொருட்களையும் நண்பரிடம் கொடுத்து விடும்படி முதலாளியிடம் தெரிவித்தபோது ஊழியரின் அலைபேசி செயலிழந்துள்ளது.

மறுநாள் வழமைபோன்று வேலைக்கு வந்த ஊழியரை, தனது அழைப்புக்கு மதிப்பளிக்கவில்லை என்று தெரிவித்த உரிமையாளர் சடுதியாக தாக்கியுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என அச்சுறுத்தியதுடன் மீண்டும் ஊழியர் மீது திங்கட்கிழமை (06) தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலையடுத்து, ஊழியர் மயக்கமடைந்ததுடன் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஊழியர்கள் இணைந்து யாழ். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று குறித்த சம்பவத்தில் தொடர்புடைய நகைக் கடை உரிமையாளரை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.

இதேவேளை, இப்பிரச்சினையை இருவரின் சமரசத்துடன் முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்தில் முறைப்பாட்டை மீளப்பெறுவதற்கான முனைப்புடனே பொலிஸார் இவ்வாறு செயற்படுகின்றனர் என நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி
யாழ்ப்பாணத்தில் கடை ஊழியரை அறைந்தார் முதலாளி! செவித்திறன் பாதிப்பு

Related Posts