Ad Widget

வேலை மாற்றம் பெற்றால் மோட்டார் சைக்கிளுக்கான முழுத்தொகையும் செலுத்தவேண்டும்

முன்னைய அரசாங்கத்தால் அரச வெளிக்கள அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பெற்ற அலுவலர்கள் தங்களது பணிகளில் இருந்து சென்றால், மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதியைச் செலுத்த வேண்டும் என திறைசேரியின் திட்டமிடல் பிரிவால் மாவட்டச் செயலகங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிக்கள அலுவலர்களிடம் 50 ஆயிரம் பெற்றுக்கொள்ளப்பட்டு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பெற்றுக்கொண்ட வெளிக்கள அலுவலர்கள் வேறு பதவிகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுதல் அல்லது பதவி விலகிச் சென்றால் மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதியை முழுமையாக ஒரே தடவையில் செலுத்த வேண்டும்.

ஆண்களுக்கான மோட்டார் சைக்கிளின் சந்தைப் பெறுமதி 1 இலட்சத்து 94 ஆயிரத்து 920 ரூபாயாகவும், பெண்களுக்கான ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் 1 இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

பதவி மாறுபவர்கள் விலகுபவர்கள் இதில் முன்னர் செலுத்திய 50 ஆயிரம் ரூபாயைக் கழித்த பின்னர் மிகுதி பணத்தை செலுத்த வேண்டும் என அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வேலை மாறிச் சென்ற சுமார் 50 அலுவலர்கள் தவணைக்கட்டணமாக இதனைச் செலுத்துவதாக கோரியபோதும் அது மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே தடவையில் முழுப்பணத்தையும் செலுத்த முடியாது எனவும் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Posts