Ad Widget

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மக்கள் மயப்படுத்தபடவுள்ளது!

தமது கவனயீர்ப்பு போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், மக்கள் மயப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இன்றைய தினம் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முற்றத்திலே முழங்கிவிட்டு உள்ளே போய் பழைய பிணங்களுக்கு வியர்க்ககூடாதென்று விசிறி தேடாதீர்கள் என்றும் தங்களுக்காக போராடுங்கள் என்றும் அரசியல்வாதிகளுக்கும் வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டம், இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது.

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பற்றுள்ள நிலையில், பட்டப்படிப்பை நிறைவுசெய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல்வாதிகள் படித்தவர்களை தெருவில் விட்டு வேடிக்கை காட்டுவதாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கபட்டு ஐம்பதாவது நாள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஊடக சந்திப்பும் முக்கிய கலந்துரையாடலும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts