வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஆளுநர் வேதநாயகன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இன்று புதன்கிழமை (13) காலை நடைபெற்றது.
இதன்போது வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும் கடற்றொழில் துறைகளின் மேம்பாடு, நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, வட மாகாணத்தின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவது குறித்தும், குறிப்பாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கான பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், விவசாய விளைபொருட்களைப் பதனிடும் நிலையங்களை வடக்கில் விரிவுபடுத்துவதன் அவசியத்தையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடற்றொழில் துறையில் கடலுணவுகள், கடல் பாசி மற்றும் கடல் அட்டை போன்றவற்றுக்கான பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் வலியுறுத்தினார்.
விவசாய மற்றும் கடற்றொழில் உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல், பதனிடுதல் மற்றும் அவற்றுக்கான குளிர்சாதனக் களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக தனியார் முதலீடுகளை வடக்கில் ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.
போர் நிறைவடைந்து பல ஆண்டுகளைக் கடந்த போதிலும், வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கான பொறிமுறைகளின் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும், இடம்பெயர்ந்த மக்கள் தமது காணி உறுதிகள் மற்றும் ஆவணங்களை இழந்தமையால் தற்போது எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சிக்கல்கள் தொடர்பாகவும் ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
அதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் காணிப் பிரச்சினை தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டம் பற்றி அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பி விளக்கத்தை பெற்றுக்கொண்டார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுமார் 4 மில்லியன் டொலர் நிதி உதவியின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘வளர்ச்சிக்கான நிர்வாகம்’ என்ற திட்டத்தின் ஊடாக, வட மாகாணத்துக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், பொதுமக்களுக்குத் தேவையான அரச சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய ‘ஒற்றைச்சாளர’ முறையிலான சமூகப் பராமரிப்பு மையங்களை உருவாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வட மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிய ஆளுநரின் நிர்வாக அனுபவங்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டினார். ‘வடக்கின் அடிமட்டப் பிரச்சினைகளை உங்களை விடச் சிறப்பாக வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது’ என அவர் ஆளுநரிடம் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நேர்மறையான அணுகுமுறைகளுக்கும், வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக அவர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கும் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்த இரு பிரமுகர்களின் சந்திப்பு நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்